இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலின் போது அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள மேற்கு வங்க மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை ஆரம்பமாகி அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை இடம்பெற்றுள்ள நிலையில் சாந்திபூர் பகுதியின் நதியா மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையத்தை கையகப்படுத்தச் சென்ற திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மேலும், மற்றொரு பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் முர்ஷிதாபாத் பகுதியில் பாஜகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வன்முறையாளர்களால் 5 பத்திரிக்கையாளர்களும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். வுன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதனால் பொதுமக்கள் வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது…
May 14, 2018 @ 04:34
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் , பல மாதங்களாக நடந்த சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. ஆளுங்கட்சியினர் மற்ற கட்சி வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேர்தலின்போது வன்முறை வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில காவற்துறையினர், 12 ஆயிரம் கொல்கத்தா காவற்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.