குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பலர் முயற்சித்து வருவதாக தாய் நாட்டுக்கான போர் வீரர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சித்து வருகின்றனர். இவர்கள் மூன்று கட்டங்களாக தமது சதித்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
நாமல் ராஜபக்ச பொது சொத்துக்களை பயன்படுத்தினார் என்று எந்த குற்றச்சாட்டும் இல்லை. கோத்தபாய மீது மிக் விமான கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்த கொடுக்கல், வாங்கல் தொடர்பான தகவலை வெளியிட முயற்சித்த லசந்த விக்ரமதுங்கவை கோத்தபாய ராஜபக்ச கொலை செய்ததாக குற்றம் சுமத்துகின்றனர். வெளிநாட்டில் உள்ள உதயங்க வீரதுங்கவுடன் சம்பந்தப்படுத்தி கோத்தபாய ராஜபக்ச பணத்தை கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். மிக் விமான கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான குழு இருந்தது. அதில் பல அதிகாரிகள் இருந்தனர். எனினும் அவர்கள் பற்றி பேசுவதில்லை.
இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகளை தொடர்ந்தும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் எனவும் மேஜர் அஜித் பிரசன்ன குறிப்பிட்டுள்ளார்.