இரண்டு தசாப்த காலத்திற்குப் பின்னர் சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள தம்மை எக்காரணம் கொண்டும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாதெனவும் அவ்வாறு வெளியேற்ற நடவடிக்கை எடுத்தாலும் தாம் வெளியேறப் போவதில்லையெனவும் இரணைதீவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள இரணைதீவில் அகிம்சைவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, நேற்றையதினம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சென்று சந்தித்து அவர்களது பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடிய போதே மக்கள் இவ்வாறு தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
போர்ச்சூழல் காரணமாக கடந்த 1992ஆம் ஆண்டு சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தாம் வாழ்ந்து வந்ததாகவும் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாழ்வாதார ரீதியில் மிகவும் பின்னடைவை சந்தித்ததாகவும், தமது எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் வெள்ளைக் கொடியுடன் தாமாகவே சொந்த நிலத்தில் மீள்குடியேறும் நிலை ஏற்பட்டதெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனப்.
கடந்த ஒருவருட காலமாக நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இரணைதீவு மக்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி இரணைதீவுக்குள் சென்று அங்கு வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.