குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.இயங்கும் சட்டவிரோத குழுக்களுடன் தொடர்புகளை பேணினார் என சந்தேகிக்கப்படும் யாழ். காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் தர உத்தியோகஸ்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முற்படுத்துமாறு வடமாகாண சிரேஸ்ட பிரதிப் காவல்துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ பணித்துள்ளதாக யாழ்.காவல்நிலைய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை குறித்த காவல்துறை உத்தியோகஸ்தரின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது அவருக்கு துணை நின்ற குற்றசாட்டில் யாழ். காவல் நிலைய தலைமை பொறுப்பதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க பணிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்க படுகின்றது.
அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,
யாழில் போதை பொருள் விநியோகம் , வாள் வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகின்றது. அவற்றினை கட்டுப்படுத்தாது , காவல்துறையினர் அவருக்கு துணை போவதாக பல மட்டங்களிலும் இருந்து குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வந்தன. அந்நிலையில் குறித்த குற்றசாட்டுக்கள் தொடர்பில் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரின் பணிப்பின் பேரில் விஷேட காவல்துறை குழு விசாரணைகளை முன்னெடுத்து இருந்தன.
குறித்த விசாரணையின் போது யாழ் காவல் நிலையத்தில் கடமையாற்றும் போலிஸ் கான்ஸ்டபிள் தர தமிழ் உத்தியோகஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்குழுக்கள் மற்றும் போதை பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை பேணி வந்தமை கண்டறியப்பட்டது.
அதனை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் மன்னாருக்கு இடமாற்ற செய்யப்பட்டதுடன் , அவர் தொடர்பிலான உள்ளக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவடைந்ததுடன் , குறித்த உத்தியோகத்தருக்கு எதிராக நீதிமன்றில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.