இறுதி கட்ட போரில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்கள் போரில் இருந்து மீண்டு வந்த மக்களுடைய கதைகள் அவர்களின் அனுபவங்களை உள்ளடக்கி முள்ளிவாய்க்கால் பதிவுகள் எனும் நூல் ஒன்று அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிறுவனத்தால் இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வு யாழ்.பொது நூலகத்தில் அடையாளம் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் தர்சா ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதலாவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரதிநிதிகள் சார்பில் சுகந்தினி தெய்வேந்திரம் உரையாற்றியிருந்தார். வடக்கு கிழக்கில் கடந்த ஒரு வருட காலமாக மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் தான் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் போராட்டம் வெடிக்கட்டும் என தியாக தீபம் திலீபன் கூறியிருந்தார். அவர் கூறியது போன்று போராட்டங்கள் மக்கள் மத்தியில் இருந்து மேல் எழும்பியுள்ளன என கூறினார்.
இரண்டாவதாக, ஊடகவியலாளர் உதயராசா சாளின் உரையாற்றியிருந்தார். நினைவு கூறலின் ஊடக இலங்கை அரசின் அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றி எங்கள் வரலாற்றை பாதுகாத்து எங்கள் போராட்டத்தை நகர்த்தி செல்ல முடியும். இராணுவ மயமாக்கல், பௌத்த சிங்கள மயமாக்கல் என்பவற்றையும் எதிர்கொள்ள முடியும், நினைவு கூறல்களை அரசியல் மயப்படுத்தாது மக்கள் மயப்படுத்திய நிகழ்வுகளாக முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறினார்.
மூன்றாவதாக மனிதவுரிமை மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தின் சட்டத்தரணி ரணித்தா மயூரன் உரையாற்றினார், ஆவணப்படுத்தலின் மூலம் எவ்வாறு அரசை கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வைக்க முடியும்? எதிர்காலத்துக்கு எவ்வாறு எங்கள் வரலாற்றை ஆவணப்படுத்தல் மூலம் கடத்தி செல்ல முடியும் என்ற வகையில் உரையாற்றினார். அதனை தொடர்ந்து நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு நிகழ்வு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.