குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியின் போது தலைமறைவாகிய வீரர்கள் நாடு கடத்தப்பட உள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் நடைபெற்று முடிந்த பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க சென்று பொதுநலவாய விளையாட்டு கிராமத்தை விட்டு தலைமறைவாகிய வீரர்களே இவ்வாறு நாடு கடத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் நள்ளிரவுடன் குறித்த வீரர்களின் வீசா காலம் பூர்த்தியாவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உகண்டா, ருவன்டா மற்றும் கமருன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகளே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளனர்.
பத்து பேர் வரையில் தலைமறைவாகியுள்ளதாகவும் இதில் ஒருவர் பயிற்றுவிப்பாளர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோரைப் போன்றே இவர்களுக்கும் குடிவரவு குடியகழ்வுச் சட்டங்கள் அமுல்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தலைமறைவாகிய நபர்களை கண்டு பிடித்து அவர்களை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.