வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவால் ஆரம்பிக்கப்பட்ட ‘முன்னோக்கி நகர்வோம்’ செயல் திட்டத்திற்கான முதலாவது முறைப்பாட்டை வடக்கு மாகாண ஆளுநர் குரே வழங்கியுள்ளார். ஈ.பி.டி.பியால் அபகரிக்கப்பட்ட காணி விவகாரம் ஒன்றையே அவர் தனது முறைப்பாடாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணியை நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, காணி உரிமையாளரின் அனுமதியையோ அல்லது எந்தவிதமான கொடுப்பனவோ இன்றி அத்துமீறி அபகரித்துள்ளதாக ஏற்கனவே முறைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிறிதர் தியேட்டருக்கு செல்பவர்களின் வாகனத் தரிப்பிடமாக அந்தக் காணியைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதனை மீட்டுத் தாருங்கள்’ என்று ஆளுநரிடம் காணி உரிமையாளரால் ஏற்கனவே முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டையே ஆளுநர், முன்னோக்கி நகர்வோம் அமைப்பிடம் கையளித்துள்ளார். ஈ.பி.டி.பியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையில் எதிர்கட்சித் தலைவராக உள்ள சி.தவராசாவிடம், அவரது கட்சியின் செயலாளர் நாயகத்திற்கு எதிரான முறைப்பாட்டை ஆளுநர் முதலாவதாக கையளித்துள்ளமை முக்கிய விடயமாக கருதப்படுகிறது.