அரசே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை!
உங்கள் கட்டளைப்படி கைகளை உயர்த்தியபடி
அம்மணமாக வெளியேறிய பாதை செப்பனிடப்பட்டுவிட்டது
துருத்தி நின்ற எலும்புகளை சதை வளர்ந்து மூடிவிட்டது
மண்மேடுகளினுள்ளிருந்து `வா’வெனக் கை அசைத்த
உடுப்புகளும் உக்கிப்போயின
துருப்பிடித்த தகரத்தால்
தொப்பூள்கொடி அறுக்கப்பட்ட குழந்தை
ஒன்பது வயதுச் சிறுவனாகி
மீண்டும் பள்ளிக்கூடமாகிவிட்ட
அகதி முகாமில் படிக்கச் செல்கிறான்
‘உலகின் மிக நீண்ட கழிப்பறை’யாகவிருந்த
கடற்கரையில்
சூள்விளக்குகள் மினுமினுக்க
மீன்பிடி வள்ளங்கள் தளும்பித் திரிகின்றன
இன்னமும் செப்பனிடப்படாத வீடுகளுள்
தங்கள் தயவினால் நிலவொளி ததும்பி வழிகிறது
எனினும்,
கண்கள் கட்டப்பட்டவர்களின்
பிடரிகளிலிருந்து பீறிட்ட குருதியின் வீச்சை
கொல்லப்படுவதற்காக
ஆடைகளற்று அமரவைக்கப்பட்டிருந்தவர்களின்
சா நிழல் படிந்த விழிகளை
சேற்றினுள்ளிருந்து கைப்பிடியாக அழைத்துவரப்பட்ட அவளை
குதறப்பட்ட மார்புகளை
பென்சில்களும் இரும்புக்கம்பிகளும் செருகப்பட்ட
பெண்குறிகளை
நாள்பட்ட பிணமென அழுகி
நாற்றமெடுத்த உங்கள் வார்த்தைகளை
தலை சிதைந்த குழந்தையின் சின்னஞ்சிறு உடலை
உணவுப் பொட்டலங்களுக்காக நீண்ட பன்னூறு கைகளை
மறக்க முடியவில்லை அரசே!
அபிவிருத்திக்கான அடுத்த நிருபத்தில்
இறந்தகாலத்தை மறப்பதற்கான கருவியொன்றையும்
தாங்கள் இணைத்துக்கொள்ள வேண்டும்!
கவிதை: தமிழ்நதி – ஓவியம்: ரமணன் –
நன்றி – விகடன்