255
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை நினைவுகளால் கனத்த மனங்களுடன் உள்ள காலம் இது. இக் கால கட்டத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் முள்ளிவாய்க்காலின் கொடிய நினைவுகளை தன் பாடக்குறிப்பு புத்தகத்தில் எழுதியுள்ள நிகழ்வொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் ஆசிரியர் ஒருவர் தமிழ் பாடத்தில் இரட்டைக் கிழவி குறித்து தனது வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்துள்ளார். இதன்போது இரட்டைக் கிழவியை உபயோகப்படுத்தி வாக்கியங்களை அமைக்குமாறு அவர்களுக்கு பயிற்சி அளித்த வேளையில் மாணவர் ஒருவர் இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுகளை தன் குறிப்பில் எழுதியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் விழுந்த செல்கள் சடசட என்று வெடித்தன என்றும் இராணுவத்தினர் பெண்களை தறதற என்று இழுத்தனர் என்றும் எனது மனம் படபட என்று அடித்தது என்றும் அந்த மாணவர் தன் பாடக் குறிப்புப் புத்தகத்தில் எழுதியுள்ளார். தரம் ஒன்பதில் கல்வி கற்கும் இந்த மாணவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது ஐந்து வயதுடைய குழந்தையாக இருந்துள்ளார்.
இத்தகைய நிகழ்வொன்றை சாதாரணமான வகுப்பறைச் செயற்பாடாக தன்னால் கடந்து செல்ல முடியவில்லை என்று குறித்த வகுப்பில் கற்பித்த ஆசிரியர் கூறுகிறார். முள்ளிவாய்க்காலை கடந்து வந்த சிறுவர்களின் மனங்களின் ஆறாத வடுக்கள் இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கின்றன.
Spread the love