குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பலந்த காணாமல் போதல்கள் குறித்த விபரங்களை வெளியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில், காணாமல் போனவர்களின் முழு விபரப் பட்டியல்களை அரசாங்கம் வெளியிட முனைப்பு காட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் முழு விபரங்களை வெளியிட வேண்டுமென கோரியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்த போது காணாமல் போனோர் விபரங்களை வெளியிடுவதாக உறுதியளித்திருந்தமையினை நினைவுபடுத்தியுள்ளது.
வட்டுவய்க்கால் பாலத்திற்கு அருகாமையில் படையினரிடம், சரணடைந்த பெரும் எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என சுட்டிக்காட்டி உள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, உண்மையை கண்டறியும் பொறிமுறைமைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.