குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதோடு,துப்பாக்கிச் சூட்டினையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துறையினர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் 8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர். -குறித்த பகுதிக்கு சென்ற குறித்த குழுவினர் முதலில் குறித்த முன்னாள் போராளியான விவசாயியின் வாகன சாரதியை பிடித்து அவரை போராளியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
பின்னர் குறித்த முன்னாள் போராளியை பிடித்து கொண்டு செல்ல முற்பட்ட போது துப்பாக்கியுடன் வந்த குழுவினருக்கும்,முன்னாள் போராளி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டதனைத்தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்த குறித்த குழுவினர் சரமாரியாக 4 தடவைகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குழுவினருக்கு முன்னாள் போராளி உள்ளிட்ட உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளதோடு,கைவிலங்கிடப் பட்டு வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த வாகன சாரதியையும் மீட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த குழுவினர் தமது காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் போது குறித்த சாரதியின் இரண்டு கையடக்கத்தொலைபேசிகள்,50 ஆயிரம் ரூபாய் பணம் அகியவை அவருடைய மேல் ஆடையுடன் கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் வெற்று ரவைகள்; 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவை காணப்பட்டது.
பாதீக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு தகவல் வழங்கியதோடு, காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் போது குறித்த காரில் துப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் காவல்துறையினர் என தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்து அங்கு காணப்பட்ட தடையப்பொருட்களான வெற்று ரவைகள்; 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். எனினும் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதீக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சம்பவம் இடம் பெற்ற இடத்தில் இரத்தக்கறைகளுடன் ஆடை ஒன்று கிடந்ததாகவும், தூப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அரச புலனாய்வுத்துறையினர் என சந்தேகிப்பதாகவும், காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர். கடும் தாக்கதலுக்கு உள்ளான குறித்த புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.