குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமது அணியினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
தமது அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில், மாநாயக்க தேரர்கள், கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி பணிகளை ஆரம்பித்ததுடன் நேற்றைய தினம் நாட்டின் சிரேஷ்ட இடதுசாரி தலைவரான டியூ. குணசேகரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் உள்ள முற்போக்கான தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி அடுத்த அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் இதனை தவிர மனசாட்சியின் சுதந்திரம் என்ற தலைப்பில் எதிர்வரும் 26 ஆம் முதல் கருத்தரங்குகளை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
முதலாவது கருத்தரங்கு மாத்தறையில் நடைபெறவுள்ளது. ஏனைய கருத்தரங்குகள் 16 பேர் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் நடத்தப்படும். நாட்டின் பொருளாதார நிலைமை, இதற்கான காரணங்கள் குறித்து புத்திஜீவிகளை கொண்டு மக்களுக்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படும் எனவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.