குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளை சேர்ந்த 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி தப்பிச் செல்ல உதவிய கடற்படை தலைமை அதிகாரி தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடத்தப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.
இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படும் சந்தன பிரசாரத் ஹெட்டியராச்சி தப்பிச் செல்ல உதவிய சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கூறியிருந்த போதிலும் அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கவில்லை. இது குறித்து கவனம் செலுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடற்படையின் முன்னாள் தளபதி, நேவி சம்பத் நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகவும் பணத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.