தீவிரவாதத்தை தோற்கடித்து இலங்கை மக்களுக்கு சுதந்திரமான, அமைதியான தேசத்தை உருவாக்கி கொடுப்பதற்காக யுத்தகளத்தில் போராடிய இராணுவத்தினரை நினைவுகூரும் முகமாக வருடாந்தம் இடம்பெறும் இராணுவ நினைவு தின நிகழ்வு இவ்வருடமும் அபிமானத்துடன் இடம்பெறவுள்ளதுடன், அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகள் நாளை (19) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளன.
தேசிய இராணுவ நினைவு தின பிரதான நிகழ்வு நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பத்தரமுல்லை பாராளுமன்ற விளையாட்டரங்கில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு அருகில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
அதனுடன் இணைந்ததாக தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரை நினைவுகூரும் பொருட்டு இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘ஒளி பூஜை’ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நாளை பிற்பகல் 6.00 மணிக்கு வரலாற்று சிறப்புமிக்க களனிய ரஜமகா விகாரையில் இடம்பெறும்.
மேலும், முப்படையையும் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு சிறந்த சேவைக்கான சேவா விபூஷன பதக்கம் வழங்கும் நிகழ்வு நாளை (19) முற்பகல் 9.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
தாய் நாட்டின் வெற்றிக்காக போர்க்களத்தில் யுத்தம் புரிந்த இராணுவத்தினரினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் நலன்புரி செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தற்போதைய அரசாங்கம் கடந்த மூன்று வருடங்களுக்குள் பல விசேட செயற்பாடுகளை நிறைவேற்றியுள்ளது. அச்செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு சென்று இராணுவத்தினரும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான சகல பொறுப்புக்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2018.05.18