வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு என்ன காரணம்? முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம் பிள்ளை கூறும் முக்கிய கருத்துக்கள்! செய்தியாக்கம் – குளோபல் தமிழ் செய்திகள்…
வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு வறுமை மாத்திரம் காரணமல்ல என்று முன்னாள் துணைவேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம் பிள்ளை கூறியுள்ளார். கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்காக இடம்பெற்ற கருத்தமர்வு ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக கல்வி வீழ்ச்சிக்கு வறுமை மாத்திரம் காரணமில்லை என்றும் தொழில் செல்வமும் (தொழிலாளர்கள்) காரணமாக அமைய முடியும் என்றும் குறிப்பிடுகின்றார். எனினும் தற்காலத்தில் மத்தியதர வர்க்க வகுப்பினரின் சுருங்குதலே வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை குறிப்பிடுகின்றார்.
ஒரு காலத்தில் இலங்கையின் வடக்குப் பகுதியில் பல கல்வியலாளர்கள், புத்தி ஜீவிகள் உருவாகி வந்தனர். பிரித்தானிய இலங்கையில் தமிழர்களே இலங்கையர்களின் பிரதிநிதியாக விளங்கினர். அத்துடன் சிங்கள தலைவரை மீட்டு வந்த பெருமையை புத்திஜீவியான சேர் பொன் இராமநாதன் பெற்றுக்கொண்டார். வடக்கிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் பல கல்வி சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இதன் காரணமாக சுதந்திர இலங்கையில் தமிழர்கள் பல பாதிப்புக்குகளுக்கும் ஒடுக்குதல்களுக்கும் உள்ளாகினர்.
இந்த நிலையில் 1980களுக்குப் பின்னர் தமிழர்களின் தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் கல்வி வீழ்ச்சியடைந்து செல்வதாக பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆண்டுகளில் சித்தி விகிதங்கள் உயர்ந்தாலும் பாரம்பரிய அடிப்படையில் தமிழர்களின் கல்வி வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இந்த நிலையில் இதற்கான காரணங்களாக தான் இனங்கண்டவற்றை முன்னாள் துணைவேந்தர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கிளிநொச்சியில் ஆசிரியர் கருத்தமர்வில் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் மத்தியதர வர்க்கத்தினர் குறைந்து வருவதாகவும் தெற்கில் மத்தியதரவரக்கத்தினர் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாநகரத்தில் மாத்திரம் 75ஆயிரம் மத்தியதர வர்க்கத்தினர் வசிப்பதாகவும் அவர் கூறுகிறார். மத்தியதர வர்க்கத்தினரான இராணுவக் குடும்பங்கள், பொலிஸ் குடும்பங்கள் தமது பிள்ளைகளை கல்வி ரீதியாக உயர்த்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதாவும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டில் மொத்தமாக 16 இலட்சம் மத்தியதர வர்க்கத்தினர் உள்ளதாகவும் அதில் தமிழ் பேசும் மத்திய தர வர்க்கத்தினர் வெறும் 1.5 லட்சம் பேரே என்றும் அவர் கூறினார்.
மத்தியதரவர்க்கத்தினர் நாட்டை விட்டு வெளியேறியமையே இலங்கையில் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிடுகிறார். ஆரம்பத்தில் செல்வந்தர்களே வெளிநாடு சென்றதாகவும் பிற்காலத்தில் மத்தியதர வர்க்கத்தினர் வெளியேறத் தொடங்கியதாகவும் கூறுகிறார். வடக்கில், பல்வேறு அரச உத்தியோகத்தங்களை புரியும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்களே தமது பிள்ளைகளை கணித, விஞ்ஞான துறைகளில் அதிகமும் கற்க வைத்ததாகவும் அவர்களே செல்வந்தர்களைக் காட்டிலும் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொண்டிருந்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்தியதர வர்க்கத்தினர் எனப்படும் இரண்டாம் பரம்பரையின் வீழ்ச்சி வடக்கின் கல்வி வீழ்ச்சிக்கு காரணமாகிவிட்டதுடன் தற்போதைய சூழலில் அறிவு கொண்ட இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் இதற்கு காரணமாக அமையலாம் என்றும் கூறுகிறார். இனத்தை விருத்தி செய்யவேண்டிய இளைஞர்கள் போரில் இறந்தமையும் அத்தகைய இளைஞர்களின் புலம்பெயர்வும் இன வீழ்ச்சிக்கும் அதன் ஊடாக கல்வி வீழ்ச்சிக்கும் அடிப்படையான காரணங்களாக அமைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை 1980களில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் இரண்டரை இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்றுள்ளதாகவும் தற்போது வடக்கு முழுவதுமே இரண்டரை லட்சம் மாணவர்கள்தான் கல்வி கற்பதாகவும் மாணவர் எண்ணிக்கையை வீழ்ச்சியை அவர் சுட்டிக்காட்டினார் தற்போது தமிழ்ச் சமூகம் கல்வியில் ஒரு தளர்வை தன்மையை அடைந்துள்ளதாக தெரிவித்த அவர், ஆசிரியர்கள் நினைத்தால் இந்த நிலையை மாற்ற முடியும் என்றும் அதற்காக ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் பொ. பாலசுந்தரம் பிள்ளை மேலும் தெரிவித்தார்.
செய்தியாக்கம் – குளோபல் தமிழ் செய்திகள்