“சர்வதேசத்திற்கு இல்லாத தைரியத்துடன் அவர்கள் வியக்கும் வகையில் போரிட்டோம்”….
“உலகில் மிக ஆபத்தான கடற்படை மற்றும் விமானப் படைகளைக் கொண்ட அமைப்பாக விடுதலைப்புலிகள் இருந்தனர். அந்தப் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக, சர்வதேசத்திற்கே இல்லாத தைரியத்துடன் போரிட்டோம். இந்தப் போராட்டத்தில் நாட்டு மக்கள் ஓர் அணியில் திரண்டு போருக்கு வலுச் சேர்த்தனர்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள விஷேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
இந்தப் போரில் முப்படையினர், காவற்துறையினர், மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவினர் என பல்லாயிரம் பேர் உயிர்த்தியாகம் செய்தனர். இன்னும் பலர் அங்கவீனமாக்கப்பட்டனர். நாட்டு மக்களின் சுதந்திரத்தையும், வாழும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரும் உயர்ந்த மானிதர்களே. எனினும் மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், இறுதிக் கட்ட யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படும் குற்றம் சாட்டுக்களை ஏற்றுக் கொண்டு, அறிக்கைகளை வெளியிடுவது, மிக மோசமான காட்டிக் கொடுப்பும், வரலாற்றுத் துரோகமும் என சுட்டிக் காட்டியுள்ளார்.