குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிம்பாப்வே அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லால்சான்ட் ராஜ்புட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூன்று மாத கால அடிப்படையில் இவ்வாறு தேசிய பயிற்றுவிப்பாளராக லால்சான்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ராஜ்புட், கடந்த காலங்களில் ஆப்கானிஸ்தான் அணியை பயிற்றுவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறந்த முறையில் தாம் பயிற்சி அளித்து வந்ததாகவும் இந்த பயிற்சி முறைமை சிம்பாப்வே நிர்வாகத்திற்கு பிடித்திருந்த காரணத்தினால் தம்மை அழைத்திருக்கலாம் எனவும் ராஜ்புட் தெரிவித்துள்ளார்.
இதுவரை காலமும் சிம்பாப்வே அணியின் பயிற்றுவிப்பாளராக அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், அணித் தலைவருமான ஹீத் ஸ்ரீக் கடமையாற்றியிருந்தார். 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு சிம்பாப்வே தகுதி பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் ஸ்ரீக் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.