Home இந்தியா ‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’

‘உங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா – எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’

by admin
இந்திராகாந்தியின் இறப்பின் போது சோனியா காந்தியுடன் முரண்பட்ட ரஜீவ்காந்தி…
ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைKEYSTONE/GETTY IMAGES

“அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான். எஃப். கென்னடி.

அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது இந்தியாவிலும் நடந்தேறியது. 1991 மே 21ஆம் தேதி இரவு சரியாக 10:21 மணிக்கு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், அவரை கொன்றவரும் பலியானார்.

முப்பது வயதான ஒரு பெண், சந்தன மாலையை அணிவிப்பதற்காக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு அருகில் சென்றார். அவர் கால்களைத் தொடுவதற்காக அந்த பெண் கீழே குனிந்தார், காதுகளை செவிடாக்கும் பெரும் சப்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைVT FREEZE FRAME

அங்கிருந்து சுமார் பத்தடி தொலைவில் கல்ஃப் நியூஸின் செய்தியாளராக பணிபுரிந்தவரும் தற்போது டெக்கான் க்ரானிகலின் பெங்களூர் நிருபராகவும் பணிபுரியும் நீனா கோபால், ராஜீவ் காந்தியின் நண்பர் சுமன் துபே ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.

“என் கண்களின் முன்னால் வெடிகுண்டு வெடித்தது”

நீனா சொல்கிறார், “சுமனுடன் நான் பேச தொடங்கி இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது, என் கண் முன்னே குண்டு வெடித்தது. வழக்கமாக வெண்ணிற ஆடைகளை அணியாத நான் அன்று வெள்ளை நிறப் புடவை அணிந்திருந்தேன். குண்டு வெடித்த பிறகு என் வெண்ணிற புடவை கறுப்பாக உருமாற, அதில் சிவப்பு வண்ணத்தில் ரத்தமும், சதை துண்டுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. அவ்வளவு அருகில் இருந்த நான் எப்படி உயிர் தப்பினேன்! மிகப்பெரிய அதிசயம்தான்”.

நீனா கோபால்
படத்தின் காப்புரிமைOMPRAKASH
Image captionநீனா கோபால்

குண்டுவெடிப்புக்கு முன்னர் பட்டாசு வெடித்தது போல பட படவென்ற ஓசை கேட்டது, பின்னர் மிகப்பெரிய சப்தத்துடன் குண்டு வெடித்தது. நான் முன்னோக்கி சென்றபோது, அங்கிருந்தவர்களின் துணிகளில் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்தவர்கள் அலறினார்கள். நாலாபுறமும் ஓடினார்கள் ஒரே குழப்பமாக இருந்தது, ராஜீவ் காந்தி உயிரோடிருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை.”

ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடித்ததும், அந்த இடத்தில் இருந்த தமிழ்நாடு காங்கிரசின் ஜி.கே.மூப்பனார், ஜெயந்தி நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ராஜீவ் காந்தியை தேடி அலைந்தார்கள். புகை சற்று அடங்கிய பிறகு ராஜீவ் காந்தியின் உடல் தெரிந்தது. பூமியை நோக்கி அவருடைய உடல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. அவரது மண்டை பிளந்து கிடந்தது. சிதறிக்கிடந்த ராஜீவின் மூளை, மரணத்தின் இறுதி கணங்களை நெருங்கிக் கொண்டிருந்த ராஜீவின் பாதுகாப்பு அதிகாரி பி.கே. குப்தாவின் காலடியில் கிடந்தது.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைVT FREEZE FRAME

குண்டு வெடிப்புக்குப் பிறகு

இந்த துயர நிகழ்வுக்கு பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் ஜி.கே மூப்பனார் இவ்வாறு கூறினார், “வெடிப்பு சப்தம் கேட்டவுடனே அனைவரும் ஓடத் தொடங்கினார்கள். காயமடைந்து கீழே விழுந்தவர்களும், இறந்து போனவர்களும் என சிதைந்த உடல்களே என் முன்னால் இருந்தன. அப்போது ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி பிரதீப் குப்தா உயிருடன் இருந்தார். அவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல முயன்றார், ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் குழப்பமாக வெளிப்பட்ட நிலையிலேயே, என் கண் முன்னரே அவரது உயிர் பிரிந்தது”.

“ராஜீவ் காந்தியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று விரும்பினார் என்று தோன்றியது. அவரது தலையை தூக்க முயன்றேன், ஆனால் கையில் சதையும், ரத்தமுமாக கொழகொழவென்று வந்தது, உடனே துண்டை எடுத்து மூடினேன்” என்று அந்த கொடுமையான சம்பவத்தை மூப்பனார் நினைவு கூர்ந்திருந்தார்.

மூப்பனார் இருந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த ஜெயந்தி நடராஜன் திகைத்துப் போய் அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றார்.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைSTR
Image captionராஜீவ் காந்தி

அந்த கணத்தைப் பற்றி பிறகு ஒரு நேர்காணலில் ஜெயந்தி நடராஜன் இவ்வாறு கூறினார்: “போலிஸ் விலகி ஓடியது, முதலில் திகைத்து நின்ற நான், அந்த சடலங்களுக்கு இடையில் ராஜீவ் காந்தி இருக்கமாட்டார் என்ற நம்பிக்கையுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். முதலில் என் கண்ணில்பட்டது பிரதீப் குப்தா. அவரது முழங்கால் அருகே தரையில் கிடந்த ஒரு தலையை பார்த்தேன்., இருந்தது… “ஓ மை காட், திஸ் லுக்ஸ் ராஜீவ்” என்ற வார்த்தைகள் என்னையறிமால் வாயில் இருந்து வெளிவந்தன.

குண்டு வெடித்த பிறகு சில நொடிகளில் நீனா கோபால், ராஜீவ் காந்தி இறுதியாக நின்ற இடத்திற்கு சென்றார்.

“ராஜீவ் காந்தியின் உடலை பார்த்துவிட்டேன். அவரது காலணி அடையாளம் தெரிந்தது. சந்தேகத்தில் கையை பார்த்தேன், அதில் இருந்த கைக்கடிகாரம் அது ராஜீவ் காந்தி தான் என்பதை உறுதி செய்துவிட்டது. இந்த துயர சம்பவம் நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக காரின் முன் இருக்கையில் ராஜீவ் காந்தி அமர்ந்திருக்க, பின் இருக்கையில் நான் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கரத்தில் இருந்த கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்த்ததால் அது எனக்கு நன்றாக நினைவில் இருந்தது” என்று நினைவுகூர்கிறார் நீனா.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

10:25க்கு 10 ஜன்பத்தில்…

அதற்குள் ராஜீவ் காந்தியின் டிரைவர் என்னிடம் ஓடிவந்து காரில் ஏறி உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்கள் என்று சொன்னார். நான் இங்கேயே இருக்கிறேன் என்று சொன்னதற்கு, இங்கு நிறைய பிரச்சனை ஏற்படும் வெளியேறுவதுதான் நல்லது என்று அவர் சொன்னார். மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸை பின்தொடர்ந்து நாங்களும் சென்றோம். “

பத்து மணி இருபத்தி ஐந்து நிமிடத்துக்கு டெல்லியில் ராஜீவின் வீடு அமைதியாக இருந்தது. ராஜீவின் அந்தரங்க செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் சாணக்யபுரியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தொலைபேசியின் அழைப்புமணி ஒலித்தது. தொலைபேசியில் பேசியவர் சென்னையில் ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்த துயர சம்பவத்தைப் பற்றி தகவல் சொன்னார்.

ராஜீவ் காந்தியின் வீட்டிற்கு (10 ஜன்பத்) ஓடினார் ஜார்ஜ். அப்போது ராஜீவின் மனைவி சோனியாவும், மகள் பிரியங்காவும் படுக்கைக்கு சென்றுவிட்டனர். அப்போது அவர்களுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டது.

ஜார்ஜை இண்டர்காமில் சோனியா அழைத்தபோது, சென்னையில் பி.சிதம்பரத்தின் மனைவி நளினியிடம் ஜார்ஜ் பேசிக் கொண்டிருந்தார். பேசி முடிக்கும்வரை, இண்டர்காமில் காத்திருப்பதாக சோனியா கூறினார்.

ராஜீவ் காந்தியை இலக்கு வைத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக நளினி சிதம்பரம் சொன்னார். இந்த தகவலை சோனியா காந்தியிடம் சொல்வதற்கு ஜார்ஜுக்கு தைரியம் வரவில்லை. 10.50க்கு மீண்டும் தொலைபேசி ஒலித்தது.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைAFP

சோனியா காந்திக்கு தகவல் தெரிந்தபோது…

சோனியாவின் சுயசரிதையில் ரஷீத் கித்வாய் இவ்வாறு எழுதியிருக்கிறார்: “அந்த தொலைபேசி அழைப்பு சென்னையிலிருந்து வந்தது. உளவுத்துறையில் இருந்து பேசுவதாகவும், ஜார்ஜ் அல்லது மேடத்திடம் பேச விரும்புவதாகவும் தொலைபேசியில் அழைத்தவர் சொன்னார். ராஜீவ் எப்படியிருக்கிறார் என்று ஜார்ஜ் கேட்க, எதிர்முனை மெளனமாக இருந்தது ஐந்து விநாடிகள் என்றாலும் அது ஜார்ஜுக்கு யுகம் போல் தோன்றியது. ஏன் எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள், ராஜீவ் எப்படி இருக்கிறார் என்று ஜார்ஜ் கேட்டார். ராஜீவ் இந்த உலகத்தில் இல்லை என்று கூறிய எதிர்முனை தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டது”.

“மேடம், மேடம் என்று கத்திக் கொண்டே ஜார்ஜ் வீட்டிற்குள் ஓடினார். ஏதோ தவறாக நடந்திருப்பதை உணர்ந்த சோனியா, இரவு உடையில் அறையில் இருந்து வெளியே வந்தார்.

அமைதியான சுபாவம் கொண்ட ஜார்ஜ், இவ்வாறு எப்போதும் உரக்க கத்தியதேயில்லை. சோனியாவை பார்த்த ஜார்ஜ், “மேடம் சென்னையில் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது” என்று நடுங்கும் குரலில் சொன்னார்.

ஜார்ஜின் கண்ணைப் பார்த்த சோனியா, “அவர் உயிருடன் இருக்கிறாரா?” என்று கேட்க, ஜார்ஜின் மெளனம் சோனியாவுக்கு உண்மையை உணர்த்திவிட்டது.

ரஷீத் கூறுகிறார், “சோனியாவின் அலறலையும், அழுகையையும் 10 ஜன்பத்தின் சுவர்கள் முதன்முறையாக கேட்டன. தகவல் தெரிந்து, ராஜீவின் வீட்டிற்கு விரைந்து வந்து, வரவேற்பறையில் நின்று கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கும் சோனியாவின் அழுகுரல் கேட்டது. அங்கு முதலில் வந்து சேர்ந்தவர் மாநிலங்களவை எம்.பி மீம் அஃப்ஜல்.

ரஷீத் கித்வயுடன் ரெஹான் ஃபஜல்
Image captionரஷீத் கித்வயுடன் ரெஹான் ஃபஜல்

கொலையில் விடுதலைப் புலிகளின் பங்கு

சோனியாவின் அழுகுரல் வீட்டின் வெளியே கேட்டதாக மீம் அஃப்ஜல் என்னிடம் சொன்னார். அப்போது அழுத அழுகையில் ஆஸ்துமாவால் கடுமையான தாக்கப்பட்ட சோனியா மூச்சு விட சிரமப்பட்டு, ஏறக்குறைய மயக்கமடையும் நிலைக்கு சென்றுவிட்டார். அம்மாவுக்கு மருந்து எடுத்துவர சென்ற பிரியங்காவால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. சோனியாவை ஆசுவாசப்படுத்தும் முயற்சியில் அவரை தட்டிக் கொடுக்கும் பிரியங்காவின் முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை.”

இந்த வழக்கை விசாரிக்க, சி.ஆர்.பி.எப் பிரிவின் ஐ.ஜி. டாக்டர் கார்த்திகேயனின் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

ராஜீவ் படுகொலையில் பிரதான குற்றவாளிகளாக கருதப்பட்ட சிவராசன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னரே சயனைடு சாப்பிட்டனர்.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஓராண்டுக்குள் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது

பிபிசியிடம் பேசிய டாக்டர் கார்த்திகேயன், “ஹரிபாபுவின் கேமராவில் இருந்து பத்து புகைப்படங்கள் கிடைத்ததுதான் எங்களுக்கு முதல் வெற்றி. பொது மக்கள் எங்களுக்கு தகவல்களை தெரிவிக்கலாம் என்று பத்திரிகைகளில் இலவச தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்தினோம். மொத்தம் மூன்று முதல் நான்காயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்தன. ஒவ்வொரு அழைப்பையும் தீவிரமாக எடுத்துக்கொண்டோம், எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாக இருக்கவில்லை. நாலாபுறமும் தொடங்கிய சோதனைகள் விரைவிலேயே பலனளிக்கத் தொடங்கியது” என்று கூறினார்.

“முதல் நாளில் இருந்து, வாரத்தின் ஏழு நாட்களும் ஓய்வின்றி வேலை செய்தேன். இரவு இரண்டு மணிக்கு பிறகு சில மணி நேரம் மட்டுமே விருந்தினர் விடுதியில் தூங்குவேன். எங்கள் சோதனைகள் எல்லாம் மூன்றே மாதங்களில் முடிந்துவிட்டாலும், தடயவியல் அறிக்கைகள் தாமதமாகவே கிடைத்தன. ஆனாலும்கூட, ராஜீவ் காந்தி இறந்து ஓராண்டு நிறைவேறுவதற்குள்ளேயே நாங்கள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம்.”

ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, நீனா கோபாலை சந்திக்க விரும்பினார் சோனியா காந்தி.

ராஜீவ் காந்தி

சோனியா காந்தி, நீனா கோபாலை சந்தித்தபோது…

நீனா கோபால் கூறுகிறர், “துபாயில் இருந்த என்னை தொலைபேசியில் அழைத்த இந்திய தூதரக அதிகாரிகள் சோனியா என்னை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார்கள். ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு சென்று சோனியாவை சந்தித்தேன். அது எங்கள் இருவருக்குமே மிகவும் துயரமான சந்திப்பாக இருந்தது. மரணத்தின் இறுதித் தருணத்தில் ராஜீவின் மனநிலை எப்படி இருந்தது? அவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் என்ன? என்று சோனியா என்னிடம் கேட்டார்.”

“அவர் நல்ல மனநிலையில் இருந்ததாக சோனியாவிடம் சொன்னேன். தேர்தல்களில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற உற்சாகத்தில் இருந்த ராஜீவ், ‘கல்ஃப் நியூஸின் அந்த பெண் மீனா எங்கே? (நீனாவை மீனா என்று குறிப்பிட்டார் ராஜீவ்) என்று ஜெயந்தி நடராஜனிடம் கேட்டார். ஜெயந்தி நடராஜன் என்னை நோக்கி நடந்து வந்தார், அப்போதுதான் குண்டு வெடித்தது” என்று கூறினார்.

ராஜீவ் காந்தி
படத்தின் காப்புரிமைAFP

ராஜீவ் சொன்னது உண்மையானது

“இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் சோனியாவும் ராஜீவும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் அரங்கில் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்ததாக, இந்திரா காந்தியின் முதன்மை செயலாளர் பி.சி.அலெக்ஸாண்டர் தான் எழுதியுள்ள ‘My Days With Indira Gandhi’ (இந்திரா காந்தியுடன் எனது நாட்கள்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திரா காந்தி படுகொலை
படத்தின் காப்புரிமைBEDI / AFP / GETTY IMAGES
Image captionஇந்திரா காந்தி படுகொலை

பிரதமராக நான் பதவியேற்க வேண்டும் என்று கட்சி விரும்புகிறது என்று சோனியாவிடம் ராஜீவ் கூறினார். அதற்கு ஒத்துக்கொள்ள மறுத்த சோனியா, ‘அவர்கள் உங்களையும் கொன்றுவிடுவார்கள்’ என்று சொன்னார். அதற்கு பதிலளித்த ராஜீவ், “எனக்கு வேறு வழியில்லை. நான் எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன்’ என்று கூறினார்.

ஏழு வருடங்களுக்கு பிறகு ராஜீவ் காந்தியின் அந்த வார்த்தை உண்மையானது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More