இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் முக்கிய பங்கை வகித்துள்ளதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.நேற்று (22.05.18) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இதனை சுட்டிக்காட்டிய அவர், பிணை முறி மோசடியில் தேடப்பட்டு வரும் ஒருவர், எவ்வாறு இந்த செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
இதேவேளை சிங்கப்பூருடனான உடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதும், அதனை அவசரமாக செய்துகொள்ள வேண்டிய தேவை காணப்பட்டதால் விரிவாக கலந்துரையாடப்படவில்லை. இந்த நிலையில் சட்டமா அதிபரின் பரிந்துரைகள் இந்த உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே அமைச்சரவை அனுமதி வழங்கியது. எனினும், அது பின்பற்றப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள தயாசிறி, குறிப்பாக, இலங்கை பணியாளர்களின் தொழிலுக்கு உத்தரவாதமளிக்கும் செயற்பாடுகளும் இந்த உடன்படிக்கையில் இல்லை. குறித்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் வகையிலான சட்ட ஏற்பாடுகளும் இல்லை. இவ்வாறு இருந்தால், பிரச்சினைகளை தீர்க்க சிங்கப்பூருக்குத்தான் செல்ல வேண்டும்.
குறிப்பாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான தேசிய கொள்கையொன்று இலங்கையில் இல்லை. இந்நிலையில், இந்த உடன்படிக்கை தொடர்பாக ஆராயவும், கொள்கைத் திட்டமொன்றை வகுக்கவும் குழுவொன்றை நியமிப்பது அவசியம்” என வலியுறுத்தி உள்ளார்.