இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
கர்நாடகத் தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சியமைக்கப் பெரும்பான்மை கிடைக்கப்பெறவில்லை. கூடுதலாக பாரதிய ஜனாதா கட்சி 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 37 இடங்களையும் ஏனைய 3 இடங்களையும் கைப் பற்றின. இதையடுத்து குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா 104 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு கொண்ட பா.ஜ.க-வின் எடியூரப்பாவை முதல்வராகப் பதவியேற்று வைத்தார். ஆனால், பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் போனதால் எடியூரப்பா பதவியை இராஜினாமா செய்தார். இதன்பின் குமாரசாமியை முதல்வராகப் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து, இன்று கர்நாடக முதல்வராகக் குமாரசாமி பதவியேற்றுக்கொண்டார்.
கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார்
May 23, 2018 @ 02:54
கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார். துணை முதல்-மந்திரியாக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பதவி ஏற்கவுள்ளார். பெங்களூரு விதான சவுதா கட்டிடத்தின் முன்பகுதியில் பதவி ஏற்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 78 இடங்களையும், ஜனதா தளம் கட்சி 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதனால் தொங்கு சட்டசபை அமைந்தது. இந்த நிலையில் ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. எனினும் ஆளுனர் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்ததுடன் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமும் கொடுத்தார்.
எனினும் பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே எடியூரப்பா முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம் தலைவர் குமாரசாமியை, ஆட்சி அமைக்க வருமாறு ஆளுனர்; அழைப்பு விடுத்தார்.இதைத்தொடர்ந்து, காங்கிரசுக்கும், ஜனதாதளம் கட்சிக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் ஆளுனரின் அழைப்பை ஏற்று கர்நாடகத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி இன்று புதன்கிழமை பதவி ஏற்கிறார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை வியாழக்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அதன் பின்னர் ஏனைய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.