குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று (புதன்கிழமை) சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் குழப்பகரமான அரசியல் சூழலிற்கு இடையில் இடம்பெறவுள்ள இந்த சந்திப்பை வரவேற்றுள்ள மஹிந்த, தன்னை சந்திக்க வருபவர்கள் புதியவர்கள் அல்லர் என்றும், ஏற்கனவே கடந்த ஆட்சிக்காலத்தின் அமைச்சர்களாக செயற்பட்டவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இன்றைய சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட அவர் “என்னைச் சந்திக்க வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களும், எனக்குப் புதியவர்களோ அல்லது விருந்தினர்களோ அல்லர். இவர்கள் எனது ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களை மகிழ்வுடன் வரவேற்கின்றேன். நாட்டினது எதிர்கால நலன் கருதிச் செயற்பட வேண்டிய பல முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ள இன்றைய சந்திப்பு நிச்சயமாக வெற்றியளிக்குமென நம்புகின்றேன்.” இந்த வகையில், இன்று இடம்பெறும் கலந்துரையாடலில் அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து கொண்ட பின்னரே ஏனைய விடயங்களைத் தீர்மானிக்க முடியும் என என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.