முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துள்ளதாக தெற்கு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை மற்றும் அமெரிக்க நாடுகளின் இரட்டைக் குடியுரிமைகளை கொண்டுள்ள கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையில் இருந்து தன்னை விலகிக்கொள்ளும் விண்ணப்பத்திருந்தார்.
எனினும் அமெரிக்க குடியேற்ற மற்றும் தேசிய சட்டத்தின் கீழ் உள்ள சில சிறப்பு விதிகளின் அடிப்படையில் கோதபாய ராஜபக்சவின் குடியுரிமையை நீக்க முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளதாக குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பு திருத்தச் சட்டத்திற்கமைய இரட்டைக்குடியுரிமை உடையவர் தேர்தலில் போட்டியிட முடியாது.
2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் நோக்குடனேயே கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்திருந்ததாகவும், அமெரிக்காவின் தற்போதைய முடிவானது அவரது நோக்கத்தை சிதறடித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.