இராணுவத்தினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என அடித்துக் கூறியுள்ள ஜனாதிபதி, பொறுப்பு கூறுதலை வலியுறுத்தியுள்ள ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் அத்தகைய குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என்பதையும் அறுதியிட்டு கூறியிருக்கின்றார்.
அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களே, இராணுவத்தின் மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தி பொய்ப்பிரசாரம் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி குற்றஞ் சாட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் எந்தவொரு இராணுவ வீரரையும் நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும் அவர் யுத்தம் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றுகையில் அழுத்தி உரைத்திருக்கின்றார்.
இராணுவம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. விடுதலைப்புலிகளுடனான சண்டைகளில் முக்கியமாக இறுதிச் சண்டைகளின்போது பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்பது அரசாங்கத்தின் தொடர்ச்சியான நிலைப்பாடு. பிரசாரமும்கூட. அத்தகைய நிலைப்பாட்டிலான பிhசாரத்தையே ஜனாதிபதி இந்த நிகழ்விலும் முன்னெடுத்திருக்கின்றார். இருப்பினும் அது வழமைக்கு மாறாக சற்றுத் தூக்கலாகவும் தீவிரமாகவும் இடம்பெற்றிருக்கின்றது என்பது கவனத்துக்குரியது.
இன்றைய இலங்கையின் அரசியல் சூழலில், அதுவும் யுத்தம் முடிவுக்கு வந்த மே 18 ஆம் திகதி நினைவுதின சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் அவர் இவ்வாறு தீவிரமாகக் கருத்து வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகின்றது. அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், நடவடிக்கைகள் என்பவற்றைக் கட்டியம் கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும், அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் எதிர்கால நிலைமைகள் அவற்றின் செல்நெறிகள் பற்றிய குறிப்புணர்த்தலாகவும் ஜனாதிபதியின் கருத்து தோற்றம் தருகின்றது.
விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக வெற்றிகொண்ட முன்னைய அரசாங்கம் அந்த வெற்றிவாதத்தையே தனது அரசியலுக்கான முதலீடாகப் பயன்படுத்தியிருந்தது. யுத்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக யுத்த வெற்றி தினத்தையொட்டிய ஒரு வார காலத்தை வெற்றிவாரமாக அந்த அரசு பிரகடனப்படுத்தியிருந்தது. ஆனால் ஒரு படி மேலே சென்றுள்ள நல்லாட்சிக்கான அரசாங்கம் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக ஒரு மாத காலத்தை வெற்றிக் கொண்டாட்ட மாதமாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. இதனை தனது அரசாங்க காலத்தின் முக்கியமான ஒரு செயற்பாடாக யுத்த வெற்றி தின நிகழ்வில் தனது வாயாலேயே ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்ல. யுத்தம் முடிவடைந்து ஒன்பதாவது ஆண்டு நிறைவில் யுத்த வெற்றியைக் கொண்டாடிய இந்த நிகழ்வில், அவர் இன்னுமொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடித்துள்ள போதிலும், இல்லாமல் செய்யப்பட்டிருக்க வேண்டிய ஈழக் கோரிக்கைக்கான சித்தாந்தத்தை – அந்தக் கோட்பாட்டை இல்லாமல் செய்வதற்கு அனைவரும் இன, மத பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய இந்த அழைப்பு ஒரு சாதாரண அழைப்பாக அமையவில்லை. யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கழிந்துள்ள நிலையில் யுத்த வெற்றியின் நினைவுதின உரையில் நாட்டு மக்களுக்கு ஓர் அறைகூவலாகவே இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த இராணுவ வெற்றிதின உரையில் இந்த அழைப்பு அதி முக்கிய செய்தியாக நாட்டு மக்களை;ச சென்றடைந்திருக்கின்றது. ஈழக் கோரிக்கைக்கான, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்களுடைய கனவு நிறைவேறப் போவதில்லை. அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தனது உரையில் எச்சரிக்கை செய்திருக்கின்றார். யுத்தத்தின் பின்னரான இந்த ஒன்பதாவது வருடத்தில் யுத்தம் காரணமாக பிளவுபட்டுக் கிடக்கின்ற சமூகங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை மேம்படுத்தி ஐக்கியத்தையும் நாட்டில் அமைதியையும் முன்னோக்கி நகர்த்துவதற்குரிய அழைப்பாக அறைகூவலாக அவருடைய உரை அமையவில்லை. மாறாக நலிவுற்ற நிலையில் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்ற இன நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளைப் பின்தள்ளி இனங்களுக்கிடையிலான இடைவெளியை அதிகப்படுத்துவதற்கான ஒரு நகர்வாகவே அவருடைய உரை அமைந்திருக்கின்றது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த மூன்றரை வருடங்களில் சர்வதேச நாடுகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு, ஈழக் கோரிக்கைக்கான சித்தாந்தத்தை அடியோடு இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆயினும் அந்த முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
ஈழக் கோரிக்கைக்கான – தனிநாட்டுக்கான விடுதலைப்புலிகளின் ஆயுதமேந்திய போராட்டத்தை முறியடித்துள்ள போதிலும், ஈழக் கோரிக்கைக்கான சித்தாந்தம் இன்னும் தொடர்கின்றது. அதன் ஊடாக நாட்டைத் துண்டாடி ஈழத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் வெளிநாடுகளிலும், தற்போது உள்நாட்டிலும் இடம்பெற்று வருகின்றன என்பது ஜனாதிபதியின் கரிசனையாகவும் கவலைக்குரிய விடயமாகவும் வெளிப்பட்டிருக்கின்றது.
ஈழக் கோரிக்கை எழுவதற்கான காரணம் என்ன?
நாட்டைத் துண்டாடுகின்ற ஈழக் கோரிக்கை எழுவதற்கு சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, நிரந்தரமாக அவை உறுதி செய்யப்படாமையே முக்கிய காரணமாகும். சிறுபான்மை இன மக்கள், பெரும்பான்மையினராகிய சிங்கள மக்களைப் போலவே இந்த நாட்டின் தேசிய இன மக்களாவர். பிறப்புரிமையுடன் கூடிய வரலாற்று ரீதியான வாழ்க்கையின் அடிப்படையில் பெரும்பான்மை இன மக்களைப் போன்ற அனைத்து உரிமைகளiயும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.
பெரும்பான்மை இனம் என்ற ரீதியில் சிங்கள மக்களோ அல்லது அவர்களி;ன் அரசியல் தலைவர்களோ, இயற்கை நீதி சார்ந்த அந்த உரிமைகளை – இறைமையை மறுக்க முடியாது. அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆயினும் அந்நியராகிய ஆங்கிலேயரிடம் இருந்து நாடு சுதந்திரமடைவதற்கான முயற்சிகள் தீவிரம் பெற்றிருந்த நாள் முதலாக இந்த பிறப்புரிமை, இந்த நாட்டு மக்கள் என்ற ரீதியில் அவர்களுக்குரிய அடிப்படை அரசியல் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது.
இவ்வாறு மறுக்கப்பட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அவைகள் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. உதாசீனம் செய்யப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை முன்வைத்த தமிழ் அரசியல் தலைவர்கள் எள்ளிநகையாடப்பட்டார்கள். ஏளனம் செய்யப்பட்டார்கள்.
இருப்பினும் அவர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கையை சாத்வீக போராட்ட வழிகளில் வலியுறுத்தி ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்த போது அவர்கள் ஆட்சி அதிகாரத்தின் வலிமையைக் கொண்டு ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். இந்த ஒடுக்குமுறைகளில் இருந்து தற்காத்துக் கொண்டு தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே இந்த நாட்டில் ஓர் ஆயுதப் போராட்டம் பரிணமித்திருந்தது.
அந்தப் போராட்டத்தில் உள்ள நியாயத்தை ஆட்சியாளர்கள் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்ளவில்லை. வாயளவில் ஏற்கப்பட்டதே ஒழிய நடைமுறையில் அதனைக் கைக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. இந்த நிலையில், தீவிரம் பெற்ற ஆயுதப் போராட்டம் அன்றைய உலக அரசியல் சூழலுக்கும், உலக அரசியல் ஒழுங்குக்கும் ஏற்ற வகையில் தந்திரோபாய ரீதியில் பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டு, ஆயுதப் போராட்டத்தி;ல் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள்.
போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் இளைஞர்களின் பின்னால் அணி திரண்டிருந்த மக்களும் பயங்கரவாதத்திற்கு ஆதரவானவர்கள் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் இறுக்கமாக அடக்கி ஒடுக்கப்பட்டார்கள். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம், அவர்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் பயங்கரவாதிகளுக்கு களத்தையும் தளத்தையும் அமைத்துக் கொடுத்த குற்றம் புரிந்தவர்கள் என்று ஏளனப்படுத்தப்பட்டார்கள்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டார்கள். பலர் வெளிப்படையாகக் கைது செய்யப்பட்டார்கள். பலர் அடையாளம் தெரியாத வகையில் கடத்திச் செல்லப்பட்டார்கள். இன்னும் பலர் அடையாளம் தெரியாத வகையிலும், வெளிப்படையாகவும் கொன்றொழிக்கப்பட்டார்கள். பயங்கரவாதிகள் என சித்தரிக்கப்பட்டவர்கள் அதே பயங்கரவாதச் செயற்பாடுகளினால் அதிகார பலத்தைக் கொண்டு அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.
இந்த வகையிலேயே பயங்கரவாதமாகத் திரிபுபடுத்தப்பட்டு பெரும் யுத்தமாகத் தீவிரமடைந்திருந்த அரசியல் உரிமைக்கான ஆயுதப் போராட்;டம், பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் இராஜதந்திர ரீதியிலான ஆதரவோடு, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள், யுத்தம் மூள்வதற்குக் காரணமாகிய அடிப்படை அரசியல் உரிமை மறுப்பை அடிப்படையாகக் கொண்ட இனப்பிரச்சினைக்கு நியாயமானதோர் அரசியல் தீர்வைக் காண முயற்சிக்கவில்லை.
நிலைமைகளில் முன்னேற்றமில்லை
அரசியல் தீர்வு காண்பதாகக் கூறி, அரசியல் உள்நோக்கம் கொண்ட கபடத்தனமான நகர்வுகளின் மூலம் காலம் கடத்தப்பட்டதே தவிர, உளப்பூர்வமாக, இதய சுத்தியுடன் கூடிய அரசியல் நகர்வுகள் முன்னெடுக்கப்படவில்லை. அரசியல் தீர்வு காண்பதற்குரிய உண்மையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுமில்லை.
இந்த உரிமை மறுப்பு நாளுக்கு நாள் காலத்துக்குக் காலம் என்ற அடிப்படையில் தீவிரம் பெற்று இப்போது சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பயங்கரவாதம் என்ற கட்டத்தைக் கடந்து, அந்த அரசியல் உரிமைப் போராட்டத்திற்கான சித்தாந்தமே, அவர்கள் மத்தியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குத் தீவிரமடைந்திருக்கின்றது. பயங்கரவாதம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் உரிமைக்கான சித்தாந்தமும் சிந்தனையும் அந்த மக்களுடைய மனங்களில் இருந்தும், அவர்களுடைய சிந்தனைகளில் இருந்தும் அகற்றப்பட வேண்டும். அதற்காக நாட்டு மக்கள் அனைவரும் இன மத பேதமின்றி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கின்றார்.
வெளிநாடுகளில் மட்டுமல்ல. உள்நாட்டிலும் ஈழக்கோரிக்கைக்கான செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்று அரச தரப்பில் இருந்தும், பேரினவாத அரசியல்வாதிகளிடமிருந்தும் கருத்துக்கள் வெளிப்பட்டிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் நிறைவடைகின்ற வேளையில், இத்தகைய கருத்து வெளிப்பாடும், பேரின அரசியல்வாதிகளின் சிந்தனையும் ஆரோக்கியமான எதிர்கால அரசியல் நிலைமைகளுக்கு ஏற்புடையதல்ல.
யுத்தம் முடிவுக்கு வந்து, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆளும் தரப்பினருடன் இணைந்து, விட்டுக்கொடுப்புடன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள நிலையில், அரசியல் உரிமை கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட சித்தாந்தத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று அரச தரப்பினர் முனைவது பேரழிவுகளை ஏற்படுத்திய யுத்தத்திற்குப் பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்துடன் கூடிய ஐக்கியத்திற்கான முயற்சிகளுக்கு ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னைய அரசாங்கம் சமாதான முயற்சிகளையும் நல்லெண்ணச் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்குப் பதிலாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவ மயமான ஒரு சூழலுக்குள் அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருந்தது.
‘விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே யுத்தம் நடத்தப்பட்டது, பயங்கரவாதிகளாhன விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கி அல்லலுற்ற தமிழ் மக்களை, உயிர்த்தியாகம் செய்து, இராணுவத்தினரே அவர்களிடமிருந்து மீட்டெடுத்து விடுதலை அளித்தார்கள். நாட்டில் சமாதானத்தை உருவாக்கினார்கள்’ என்று பெருமை பேசிய முன்னைய அரசாங்கம் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கப் போகின்றது என்ற அரசியல் பூச்சாண்டி காட்டி, தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துகின்றோம் எனக் கூறி யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கையும் கிழக்கையும் முழுமையான இராணுவ சூழலுக்குள் ஆழ்த்தியிருந்தது.
உண்மையாகவே பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் மக்களை அந்த அரசாங்கம் மீட்டிருக்குமானால், அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அவர்கள் சதந்திரமாக மன அமைதியுடனும், வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை. மாறாக பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்று பிரசாரம் செய்து கொண்டு, யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நைந்து நொந்து போன மக்கள் மத்தியில் இருந்து பயங்கரவாதம் எழுந்துவிடாமல் தடுப்பதற்காகத் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கின்றோம் என சாதாரணமாகக் கூறி வந்தது.
இராணுவத்தை முதன்மைப்படுத்தி எதேச்சதிகாரப் போக்கில் நாடு வழிநடத்தப்படுவதாகக் குற்றஞ் சுமத்தி ஜனநாயகத்தையும், இன ஐக்கியத்தையும் அமைதியையும் உருவாக்கப் போவதாகக் கூறியே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் முன்னைய அரசாங்கத்தின் இராணுவச் சூழலை முற்றாக இல்லாமல் செய்யவில்லை. இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவுமில்லை. இராணுவச் சூழலில் குறிப்பிட்டுக் கூறத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி மக்கள் ஓரளவு சுதந்திரமாக நடமாடவும் செயற்படுவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது என்னவோ உண்மைதான். அதனை மறுக்க முடியாது.
வளமான எதிர்காலத்திற்கு நல்லதலல
ஆயினும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பொதுமக்களுடைய காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் வேகமான செயற்பாட்டைக் காண முடியவில்லை. மாறாக யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள நல்லாட்சி அரசாங்கம், யுத்த காலத்திலும் பார்க்க அதிக தொகையிலான நிதியைத் தனது வரவு செலவுத் திட்டங்களின் மூலம் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்திற்கு ஒதுக்கி வருகின்றது. இதன் மூலம் அபரிமிதமாக இராணுவ நலன்கள் போஷிக்கப்படுகின்றனவே தவிர, யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் காணப்படுகின்ற அளவுக்கு மிஞ்சிய இராணுவ பிரசன்னத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
முன்னைய ஆட்சியிலும்பார்க்க, வடக்கிலும் கிழக்கிலும் இராணுவத்;தின் நடமாட்டம் குறைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இராணுவ முகாம்கள் நிரந்தரமானவைகளாகப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. பண்ணை விவசாயம், உல்லாசப் பயணத்துறை சார்ந்த ஹோட்டல் மற்றும் உணவு விடுதிகளின் ஊடான வர்த்தகம் போன்ற பொருளாதார அபிவிருத்திச் செயற்பாடுகளில் இரணுவத்தினர் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். பொதுமக்களுடைய கலை, கலாசார, விளையாட்டுத்துறைச் செயற்பாடுகளில் கிட்டத்தட்ட ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது என்று கூறுமளவுக்கு இராணுவத்தின் நேரடி பங்களிப்பும் செயற்பாடுகளும் அமைந்திருக்கின்றன.
காலத்துக்குக் காலம் கலாசார விழாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பாரம்பரிய உணவு விழா போன்ற நிகழ்வுகளையும் பிரம்மாண்டமான அளவில் இராணுவமே முழுமையாக ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றது. அதேபோன்று பௌத்தர்கள் குறைவாக வாழ்கின்ற இடங்களிலும், பௌத்த மக்களே இல்லாத இடங்களிலும் வெசாக் பண்டிகையைப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இராணுவமே செய்து அந்தப் பிரதேசங்களை பௌத்த பிரதேசமாக உருவகித்துக் காட்டி வருகின்றது.
மீள்குடியேற்றப் பிரதேசங்களில் பொதுமக்களுடைய வாழ்க்கை மேம்பாட்டிற்கான வேலைத்திட்டங்கள் என்ற போர்வையில் இராணுவத்தினர் சிவில் செயற்பாடுகளிலும் நடவடிக்கைகளிலும் சாதாரணமாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள். சமூக சிவில் வாழ்;க்கைச் செயற்பாடுகளில் இருந்து இராணுவத்தை ஒதுக்கி, கடும் மழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலேயே இராணுவத்தினரைப் பயன்படுத்தவதே ஜனநாயக ஆட்சியின் நடைமுறை. ஆனால் இங்கு மீள்குடியேற்றப் பகுதிகளில் இடம்பெயர்ந்து அல்லலுற்ற மக்களுடைய சமூக சிவில் வாழ்க்கையில் வலிந்து மூக்கை நுழைத்து, இராணுவத்தினரை அரசியல் செயற்பாடுகளில் அரசு பண்பு நலன் சார்ந்த நிலையில் செல்வாக்கு செலுத்துவதற்கு இந்த அரசாங்கம் அனுமதித்திருக்கின்றது.
இத்தகைய பின்னணியில்தான் இராணுவம் போர்க்குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடN இல்லை என்றும், எந்தவொரு இராணுவத்தினரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் என்றும், கூறியுள்ள ஜனாதிபதி, ஒழிக்கப்பட்டுவிட்ட பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கின்றது என்ற பிரசாரத்தைக் கைவிட்டு, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி ஆதரவாளர்கள், நாட்டைப் பிரித்துத் துண்டாடுவதற்கான ஈழக் கோரிக்கையை முன்னெடுத்து அதனைச் செயற்படுத்த முனைந்திருக்கின்றார்கள் என்ற அபாய அறிவிப்பைத் தொனி செய்திருக்கின்றார்.
அந்த ஈழக்கோரிக்கையாளர்களின் தலை நிமிர்த்தலை முறியடிப்பதற்கு, அரசியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான சிந்தனையையும் சித்தாந்தத்தையும், ஈழக் கோரிக்கைக்கான சித்தாந்தம் என்று வகைப்படுத்தி அதனை இல்லாமல் செய்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பை விடுத்திருக்கின்றார்.
சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாகி இருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இருப்புக்கும் நாட்டின் வளமான அரசியல் எதிர்காலத்திற்கும்கூட நன்மை தரமாட்டடாது. நல்லதல்ல என்றே கூற வேண்டும்.