குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணத்தில் கடமையாற்றுகின்ற அரச வைத்தியர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாது நிலுவையில் காணப்பட்ட நிலையில் , நிலுவையில் உள்ள மேலதிக நேரக்கொடுப்பனவை இவ் வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
குறித்த பிரச்சினை தொடர்பாக வடமாகாண சுகதார அமைச்சு மத்திய அரசுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதெனினும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அடையாள பணிப்பகிஸ்கரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு பணிப்பகிஸ்கரிப்பும் இடம் பெற்றது.
எனினும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து இதற்கான நிதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் உரிய காலத்தில் கிடைக்கவில்லை. -இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் மாகாண திறைசேரிக்கு நிதி வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக மாகாண திறைசேரியில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குரிய நிலுவைகளை இந்த வாரத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாகாண திறைசேரியில் இருந்து இவ்வாரத்துக்குள் வைத்தியர்களுக்கான நிலுவையில் உள்ள மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய திறைசேரியினால் மாகாண திறைசேரிக்கு குறித்த பணம் வழங்கப்படும் என உறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மேலும் தெரிவித்தார்.