வடமாகாண மருத்துவர்களின் கொடுப்பனவுகள் ஏனைய மாகாணங்களில் வழங்கப்பட்டபோதும் வட மாகாண அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தமக்கு கிடைக்கவில்லை என வடமாகாண அரச மருத்துவர்கள் கடந்தவாரம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர் . அவர்கள் தமது கொடுப்பனவை ஏலவே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஏனைய மாகாணங்கள் வழங்கியதுபோல வழங்குமாறும் ,குறையை நிரப்புவதற்க்காக மேலதிக கோரிக்கையினை திறைசேரியிடம் சமர்ப்பித்து குறையை ஈடு செய்யுமாறும் கோரி இருந்தனர்.
எனினும் அக்கோரிக்கை நிதிப் பிரமாணங்கள் விளங்காமல் விடப்பட்ட கோரிக்கை என மாகாணசபை அதிகாரிகளால் நிராகரிக்கப் பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பை வைத்தியர்கள் மேற்கொண்டிருந்தனர். எனினும் தற்போது மத்திய திறைசேரி ஏலவே உள்ள நிதியைக் கொண்டு கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது . இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரிடம் வினவிய போது ‘ நாம் எதிர்வரும் 28ம் திகதி வரை காலக்கெடு வழங்கியுள்ளோம் , இனியும் நொண்டிச்சாட்டுக்கள் கூறி கால இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனின் ஏலவே திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்தத்தில் நாம் ஈடுபடுவோம்’ எனக் குறிப்பிட்டனர்.