ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் படையினர் நேற்று நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக எல்லைப் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதால் பல கிராமங்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜம்மு காஷ்மீரில் ஜம்மு, கதுவா, சம்பா ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் கிராமங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் படையினர் நேற்று 9-வது நாளாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் பீரங்கி குண்டுகளை வீசியும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதன்காரணமாக ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடந்த சில நாட்களில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகள் அல்லது அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். இதேவேளை ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள உரி பகுதியில் பாகிஸ்தான் படையினர் இன்று அதிகாலையும் கமால் கூட் பகுதியில் உள்ள வீடுகள் மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலின் சேத விவரங்கள் வெளியாகவில்லை.