குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை நீக்குவதற்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பிரேரணை இன்று (25.05.18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
குறித்த சட்டமூலம் தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற அமர்வின்போது முன்வைக்கப்படவிருந்த இந்தப் பிரேரணை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பிற்போடப்பட்டதாகவும் அதனால் இன்று குறித்த சட்டமூலம் தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்று காலை 10.30 மணிக்கு கூடவுள்ள பாராளுமன்ற அமர்வில், கலால் கட்டளைச் சட்டத்தின் கீழான அறிவித்தல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான ஏழு யோசனைகள் மீதான விவாதம் என்பனவும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.