கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் நிறுவனம் உட்பட செய்திகள் அனுப்பும் புதிய ரக கைக்கடிகாரத்தை போட்டியின் போது அணியக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் ஊழல் தடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் போட்டியின் போது தங்கள் கைத்தொலைபேசி மற்றும் செய்தி தொடர்பு சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது என்பது போது சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் விதிமுறையாகும்.
போட்டியின் போது இடம்பெறும் சூதாட்டத்தை தடுப்பதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அப்பிள் கடிகாரம் மூலம் செய்திகளை பரிமாற முடியும் என்பதால் கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரத்தையும் பயன்படுத்தக்கூடாது என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை ஊழல் தடுப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அப்பிள் கைக்கடிகாரத்தை அணிந்திருந்த நிலையில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தகைய கடிகாரத்தினை அணிய மாட்டோம் என வீரர்கள் உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.