இலங்கையை உலுப்பும் ஒரு விவகாரமாக வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை காணப்படுகின்றது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு நான்கு வருடங்களாக வீட்டில் இருக்கின்றனர் பட்டதாரிகள். அதிலும் ஆசிரியராக வேண்டும், ஒரு குறிப்பிட்ட உத்தியோகத்தர் ஆக வேண்டும் என்ற கனவுகளுடன் வந்த பட்டதாரிகள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். மனித வலு, சிந்தனை உழைப்பு எல்லாமே இதனால் வீணடிக்கப்படுகிறது. அது மாத்திரமல்ல பல்வேறு மன உளைச்சல்களையும் சிக்கல்களையும் இந்த நிலை ஏற்படுத்துகின்றது.
ஜூன் மாத்தில் நியமனம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் பட்டதாரிகளுக்கு நேர்முகம் இடம்பெற்றது. தற்போது வேலையற்ற பட்டதாரிகளுக்கு குறிப்பிட்ட காலத்தில் நியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான காரணமாக பட்டதாரிகளது க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கலே காரணம் என்றும் கூறப்படுகிறது. சாதாரண தரத்தில் கணதத்தில் சித்தியடைந்த நிலையில் சிலர் பட்டம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த தகவல்கள் பட்டதாரிகளை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நான்கு வருடங்களுக்கும் அதிகமாக வேலையின்றி இருந்த பட்டதாரிகள் தமக்கு ஜூன் மாதம் நியமனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நேர்முகத்திற்குச் சென்ற நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த தகவல்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஒரு நிலையை அவர்களுக்கு தோற்றுவித்துள்ளது. இதேவேளை நடாத்தப்பட்ட நேர்முகத்தின் கோளாறுகள் காரணமாகவே இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக நேர் முகத்தை சந்தித்த பட்டதாரிகள் குறிப்பிடுகின்றனர்.
நேர்முகத்தின்போது, கணினி கற்கை சான்றிதழ்கள், தொழில்சார் கற்றை சான்றிதழ்கள் முதலியவற்றையே கேட்டு புள்ளிகள் இடப்பட்டதாக கூறியுள்ள பட்டதாரிகள் தமது க.பொ.த சாதாரண தர பெறுபேறு சான்றிதழ்களைக்கூட பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர். பட்டதாரிகளின் தனித்துவமான திறமைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்று கூறும் அவர்கள், தம்மிடம் தொழில் முன்னனுபவ சான்றிதழ்களை கேட்பது எத்தகைய முட்டாள்தனமானது என்றும் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு கூறி தமது நியமனத்தை இழுத்தடிக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றனர்