தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோதமாக காவல்துறையினர் காவலில் வைத்து சித்ரவதை செய்த 95 வாலிபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்திருந்தது. இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற சட்டத்தரணி நீதிமன்றில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என குறித்த மனுவில் தெரிவித்திருந்தார்.
அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா என நேரில் போய் விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் நேரில் சென்று பார்த்ததில் அங்கு 95 வாலிபர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தததாகவும் அவர்கள் அனைவரும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்புங்கள் அல்லது விடுதலை செய்யுங்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விட்டு, ஏனைய 30 பேரை விடுவித்தனர். வழக்கு போடப்பட்ட 65 பேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்
குறித்த 65 பேரின் பிணை மனுக்களையும் இரவு முழுவதும் அமர்ந்து விசாரிக்குமாறு மதுரை உயர்நீதிமன்ற பதிவாளர் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டார். அதை ஏற்று, பிணை மனுக்கள் விசாரிக்கப்பட்டு 65 பேரையும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிணையில் விடுவிக்கப்பட்ட 65 பேரும் மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரச மருத்துவமனைக்கு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பலர் ரத்தக்காயத்துடன் காணப்பட்டனர் எனவும் அவர்கள் சட்டவிரோத காவலில் அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சித்ரவதை பற்றி அவர்கள் கொடுத்துள்ளனர். இது, மனித உரிமை ஆணைய விசாரணையின்போது, காவல்துறையினருக்கு பாதகமாக அமையும் என கூறப்படுகிறது.