ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழும நிறுவனங்களை லண்டன் பங்குச்சந்தையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என பிரித்தானிய எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி தமிழகத்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகின்ற அதேவேளை பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் அருகிலும் தமிழர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில், லண்டன் பங்குச் சந்தையில், வேதாந்தா பங்கு விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. மேலும் சூழலியலுக்கு எதிரான தொழிற்சாலைக்கு எதிராக போராடியதற்காக பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுள்ளனர் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து லண்டன் பங்கு சந்தையில் இருந்து வேதாந்தா குழும பங்குகளை விலக்க வேண்டும் என் அந்நாட்டு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த நிறுவனம் சுற்றுச்சூழலை சீரழித்து பொதுமக்கள் கட்டாயமாக வெளியேறும் வகையில் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலை செய்து வருகிறது எனவும் பிரச்சார இயக்கங்கள் சர்வதேச பொது மன்னிப்பு சபை போன்ற அரச சார்பற்ற அமைப்புகளும் வேதாந்தா நிறுவனம் மீது குற்றம்சாட்டியுள்ளன என தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜோன் மக்டோனல் கூறியுள்ளார்.
மும்பை பங்கு சந்தையில் ஏற்கனவே வேதாந்தா அளித்த அறிக்கையில், தூத்துக்குடியில் தங்கள் நிறுவனத்தின் முதல் அலகு மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்ததையடுத்து லண்டன் பங்கு சந்தையிலும் வேதாந்தா குழுமத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. எனினும் லண்டன் பங்குச் சந்தை இந்த பிரச்சினையில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது