தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டும் என்கிறார் தர்ஷன ஹெட்டியாராச்சி….
இலங்கை இராணுவத்தில் வெற்றிடமாக உள்ள இராணுவம் சாராத பணிகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகள், நெல்லியடியில் நேற்று (26.05.18) இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கூறுகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், இராணுவத்தில் இணைந்து தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளைஞர்களை இணைத்துகொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எதிர்வரும் மூன்று வார காலத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படும். இராணுவம் சாராத ஊழியர்களும் இராணுவ வீரர்களை போலவே கௌரவமாக எம்மால் நடத்தப்படுகின்றனர்.
இது சிங்கள இராணுவம் அல்ல. எல்லா இனத்தவர்களுக்குமான இராணுவமாகும். ஆகவே தமிழ் இளைஞர்களும் குறிப்பாக, 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் இணைய முடியும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளையோர்கள் இராணுவத்தில் இணைகின்ற போது யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணியாற்ற முடியும். தினமும் கடமையை நிறைவு செய்து வீட்டுக்குச் செல்ல முடியும்.யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்கள் கணிசமான அளவில் இராணுவத்தில் இணைவதன் மூலம் தமிழ் இராணுவத்தை இங்கு உருவாக்க முடியும்” எனக் கூறியுள்ளார்..
இதேவேளை வன்னியில் இராணுவத்தில் தமிழர்கள் எனக் கூறி உள்வாங்கப்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவப் பண்ணைகளில் கூலித் தொழலாளர்களாகவும், இராணுவத்தினரின் எடுபிடி வேலைகளுக்கான பணியாளர்களாகவும் நடத்தப்படுவதும், அவர்கள் துன்பப்படுவதும் குறிப்பிடத்தக்கது.