நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய வேண்டும் என ஜேவிபி குறிப்பிடுவதற்கு நியாயமான காரணிகள் எதுவும் கிடையாது என, பிவிதுருஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மக்கள் விடுதலை முன்னணியினர் தனிநபர் பிரேரணையாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை முன்வைத்துள்ளனர். இத்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறை அரசியல் நிலைப்பாடுகளுக்கு முரண்பட்டதாகவே காணப்படுகின்றது.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் என்பது நாட்டில் குறிப்பாக இலங்கையில் சர்வாதிகார ஆட்சியை தடுக்கும் ஆயுதமாகவே இதுவரை காலமும் காணப்பட்டுள்ளது. 20 ஆவது திருத்தத்தின் மூலம் நாட்டில் அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை. மாறாக அரசியல் நெருக்கடிகளே தோற்றம் பெறும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை எதிர்ப்பதற்கான முறையான காரணம் அறியாமலே மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது என உதய கம்மன்பில கூறியுள்ளார்.