40,017 குடும்பங்ளைச் சேர்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இலங்கையின் 21 மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக பெய்துவரும் மழை காரணமாக 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 40,017 குடும்பங்ளைச் சேர்ந்த 1 லட்சத்து 53 ஆயிரத்து 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 265 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர் மழையினால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காணப்படும் நிலையில் ஆங்காங்கே மண் சரிவு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்புக்கள் குறையும் வரை அனைத்து மாவட்ட, பிரதேச செயலகங்களின் அரச அதிகாரிகளின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுதேச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை சிலாபம், மாதம்பை பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை மீட்கச் சென்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெள்ளம், மண்சரிவு காரணமாக இதுவரை 4,700 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இவற்றில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.