குளோபல் தமிழ் செய்தியாளர்..
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழாவை முன்னிட்டு கடலில் தீர்த்தமெடுத்து அதில் ஒரு வாரம் விளக்கேற்றும் நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகின்றது.
இந்த ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே முள்ளிவாய்க்கால் இறுதியுத்தம் நடந்தது. ஈழத் தமிழ்மக்களின் வரலாற்றுடன் பின்னிணிப் பிணைந்த இந்த ஆலயம் தமிழ்மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் அவல வரலாற்றிலும் இரண்டக்கலந்துவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் இறுதி யுத்தத்தின் தாக்குமிகு நிகழ்வுகள் இப் பகுதியில் நடைபெற்றுள்ளன.
மதுரையிலிருந்து வற்றாப்பளை வந்த கண்ணகியின் சரித்திரம்
இந்த ஆலயம் சிலப்பதிகார காலத்துடன் தொடர்புடையது. குற்ற மள்ள கோவலனை பாண்டிய மன்னன் கொன்றபோது ஆத்திரமடைந்த கண்ணகி அவனடம் நீதி கேட்டு வழக்குரைத்தாள். பின்னர் குற்றத்தை பாண்டிய மன்னன் ஒப்புக்கொள்ள மதுரையை சாபமிட்டு எரிப்பதாக சிலப்பதிகார காப்பியம் கூறுகிறது.
மதுரையை ஆவேசத்துடன் எரித்த கண்ணகி மதுரையை விட்டு வெளியேறி ஈழத்திற்கு வந்து பத்து இடங்களில் ஆறியதாக நம்பப்படுகிறது. பத்தாவது இடமாக வற்றாப்பளை அமைந்ததை காரணமாக பத்தாப்பளை என்பது பின்னர் மருவி வற்றாப்பளையாக பெயர் பெற்றது என்றும் வரலாறு குறிப்பிடுகிறது.
நீர் நிறைந்த நந்திக்கடலோரம் வந்த கண்ணகி ஒரு மூதாட்டியின் தோற்றத்தில் வந்து ஆடு மேய்க்கும் இடையச் சிறுவர்களிடத்தில் பசிக்கிறது என்றும் உணவு தருமாறும் கேட்டார் என்றும் தலையில் நிறைய பேன் உள்ளது அதனை எடுக்குமாறு கூறியபோது தலைமுழுவதும் கண்கள் இருந்ததாகவும் அதனால் கண்ணகி என்று உணர்ந்ததாகவும் இந்த ஆலயம் குறித்த ஐதீக கதைகள் கூறுகின்றன.
இதேவேளை அச் சிறுவர்கள் பாற்சோறு காய்சிச கொடுப்பதற்காக அந்த மூதாட்டியை தேடியபோது அவள் மறைந்துவிட்டதாகவும் அந்த இடத்தில் பாற்புக்கையை படைத்த அந்த நாளே வைகாசி விசாக நாள் என்றும் ஆண்டுதோறும் அந்த நாளில் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு பொங்கல் எடுக்கப்படுகிறது.
கிராமிய மக்களின் தாய் கண்ணகி
வன்னிப் பிரதேச மக்களின் கிராமிய வழிபாட்டுடன் தொடர்புடைய வற்றாப்பளை அம்மன் ஆலயம் இயற்கை சார்ந்த வழிபாடாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. நந்திக்கடல் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம் பண்டைய ஈழத்து வன்னி மன்னர்களின் ஆட்சிக்காலத்துடன் தொடர்புடையது.
பல நூற்றாண்டுகள் தொன்மையுடைய இந்த ஆலயம் ஏழை மக்களின் ஆலயமாகவும் உழைக்கும் மக்களின் ஆலயமாகவும் அடையாளம் பெறுகிறது. அத்துடன் தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறைகளில் ஒன்றான தாய்த் தெய்வ வழிபாட்டு முறையையும் பிரதிபலிக்கிறது. தாய் தெய்வ வழிபாடு என்பது உன்னதமான ஒழுக்க நெறியாகவும் முன்னிலை பெறுகிறது.
இந்த ஆலயத்தை மையப்படுத்தி கோவலன் கூத்து, கண்ணகி கூத்து என்பன ஆடப்படுகின்றன. வை இந்த மக்களின் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்த கிராமிய கலை வடிவங்களாகும். இன்றைய தினம் பொங்கல் விழாவில் இந்த ஆலயம் குறித்த பண்டைய இலக்கியகப் பாடல்கள் பாடப்படுகின்றன. அவை சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் கிராமிய மொழியில் அமைந்திருந்தது.
தீர்த்தமெடுக்கும் நிகழ்வு
முள்ளியவளை காட்டா விநாயகர் கோயிலிலிருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பக்தர்கள் புடைசூழ சிலாவத்தைக் கடலில் தீர்த்தம் எடுப்பதற்காக புறப்பட்டனர். பொங்கல் நடைபெறப் போகின்ற தென்பதை உபகரிப்புக்காரருக்கும் பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம் இடம்பெற்றது. பாக்குத் தெண்டியவரே தீர்த்தமெடுக்கும் வெங்கலப் பாத்திரத்தைச் சுமந்து செல்வர். தீர்த்தமெடுப்பவர் தன் வாயை வெள்ளைத் துணியால் கட்டியிருப்பர். தீர்த்தமெடுப்பவருக்கு உதவியாக இருவர் பணியாற்றுவர்.
கடலில் இறங்கி வாயூறு நீர்வரைக்கும் சென்று நிற்பர். பாத்திரத்தைத் தோளில் தாங்கி வைத்திருக்கும் போதே கடல் அலை வந்து மூடும் போது பாத்திரம் தண்ணீரால் நிறைந்துவிடும். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தை அங்குள்ள மடையில் வைத்துப் பூசை செய்வர்.
அதன் பின்னர் பிற்பகல் சுமார் 6.30 அளவில் அங்கிருந்து காட்டா விநாயகர் கோயிலை நோக்கிப் புறப்படுவர். அப்பொழுது கடற்கரை மண் சிறிதளவு எடுத்துத் துணியில் முடிந்துகொண்டு இன்னொருவர் செல்லத் தீர்த்தக்குடம் வரும் வழிநெடுகிலும் மக்கள் பந்தலிட்டு மாவிலைத் தோரணம் கட்டி, நிறைகுடம் வைத்து வரவேற்பர். நிறைகுடப் பந்தல்களில் தரித்து நின்று இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் காட்டாவிநாயகர் ஆலயத்தைச் சென்றடைந்துவிடுவர்.
தண்ணீரில் விளக்கெரியும் அற்புதம்
அங்கு விசேட பூசை நடைபெறும். அந்தத் தருணம் அடிக்கப்படும் ஆலயமணியின் ஓசையும் பறை ஒலியும் சேர்ந்து பரவி அப்பகுதி மக்களை மெயசிலிர்க்க வைக்கும். தீர்த்தக்குடத்தை விநாயகர் ஆலயத்திலுள்ள அம்மன் மண்டபத்தில் இறக்கி வைப்பர். இரவு 10மணியளவில் அம்மன் மண்டபத்தில் கும்பம் வைத்து (அம்மன் கும்பம்), மடை பரவி, ஒரு மட்பாத்திரத்தில், கொண்டுவரப்பட்ட உப்புநீரை நிரப்பி, அதனைக் கடற்கரையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண்மீது வைத்துத் திரியிட்டு விளக்கேற்றுவர். தொடர்ந்து ஏழு நாள்கள் கடல்நீரில் விளக்கெரியும்.
ஏழாவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு விநாயகர் ஆலயத்தில் பொங்கல் நடைபெறும். மறுநாள் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு பொங்கல் பொருள்களுடன் கடல்நீரில் எரியும் விளக்கு என்பன வாத்தியங்களுடன்
வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். அன்று பகல் தொடக்கம் பூஜை வழிபாடுகள் இடம்பெறும். இரவு பொங்கல் இடம்பெறும்.
இன்றைய திருவிழாவை முன்னிட்டு வடகிழக்கு தமிழர் பகுதியிலிருந்து மாத்திரமின்றி தென்னிலங்கையிலிருந்தும் மக்கள் வருகை தந்துள்ளனர். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் நிறைவது வழக்கமானது. தற்போது இந்த ஆலயம் தமிழகத்தின் மாமல்ல புரத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சிற்பக் கலைஞர்களால் புனர் நிர்மாணம் செய்யப்படுகின்றது.