கோத்தாபய ராஜபக்ஷ..
“இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் இந்த நாட்டின் கௌரவமான மக்களாக வாழக்கூடிய நாடாக எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும்.”
“இலங்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் உருவாகப்போகும் ஆட்சியில் சிறுபான்மை மக்கள் எவ்வித அச்சமுமின்றி மத நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், தமது வர்த்தக நடவடிக்கைகளை சரியான வழியில் கொண்டு செல்வதற்குமான சூழலை பெற்றுக் கொடுப்பதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.
பேருவளையில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், “கடந்த ஆட்சியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் சாதாராண வாழ்க்கை சூழலை குழப்பவோ அவர்களின் இன, மத, கலாசார நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையை பாதுகாக்கவே இப்போதும் நாம் முயற்சித்து வருகின்றோம்”
“ராஜபக்ஷவினர் குறித்து சிறுபான்மை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொய்யான கருத்துக்கள் இன்று வெளிச்சத்துக்கு வரும் நிலைமை காணப்படுகின்றது. குறிப்பாக பாதுகாப்பு செயலாளராக நான் கடமையாற்றிய காலத்தில் முஸ்லிம் மக்களை பாதுகாக்கவும் அவர்களின் அபிவிருத்திக்காக நான் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் என்னுடன் கடமையாற்றிய நபர்களுக்கு நன்றாகத் தெரியும். அன்று யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் நாம் முன்னெடுத்த அபிவிருத்திகள், தமிழ் முஸ்லிம் மக்களை பாதுகாக்க நாம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை அனைவரும் அறிந்திருப்பார்கள்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்களை நாம் ஒருபோதும் கைவிடவில்லை. இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் இந்த நாட்டின் கௌரவமான மக்களாக வாழக்கூடிய நாடாக எமது நாட்டை மாற்றியமைக்க வேண்டும் என்பதே எமது கொள்கையாகும். ” என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தி உள்ளார்.