குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார்…
மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (28) மாலை 4.15 மணியளவில் முதற்கட்டமாக அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
முதலில் இன்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த குறித்த விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பமான அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுனர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர்,களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிறைஞ்சன், ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுனத்துவ காவற்துறையினர், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகாரசபை,மன்னார் நகரசபை,நில அளவைத்திணைக்களம்,பிரதேச செயலகம்,மாவட்டச் செயலகம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஆகியவற்றின் பிரதி நிதிகள்,தலைவர்கள் கலந்து கொண்டதோடு,மன்னார் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று மதியம் 1.30 மணியளவில் குறித்த பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மண்ணில் மன்னார் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது சந்தேகத்திற்கு இடமான எலும்புத்துண்டுகள்,பற்கள் என பல எச்சங்கள் அகழ்வில் இருந்து மீட்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து குறித்த அகழ்வு பணிகள் 4.15 மணியளவில் நிறுத்தப்பட்ட நிலையில் 4.30 மணியளவில் மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த வளாகத்தில் முதல் கட்ட அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது அழைக்கப்பட்ட சகல திணைக்கள பிரதி நிதிகளும் வருகை தந்து அரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம் பெற்றன.
மாலை 5 மணியளவில் பணிகள் நிறைவந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் பணிகள் மன்னார் நீதவான் முன்னிலையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.