பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று இரவு (28.05.18) விருந்துக்குச் சென்ற யு.எஸ் விடுதி மீது, இனம் தெரியாதவர்கள் கல்வீச்சை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் மின் தடைப்பட்டு இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் சென்றுள்ள பிரதமர் தனது உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் கலந்துரையாடல்களை நிறைவு செய்த பின், இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த யு.எஸ் விடுதிக்கு, தனது குழுவினருடன் சென்றிருந்தார். அந்த வேளை உள்ளுர் நேரம் இரவு 9.45 மணி அளவில் மின் தடைப்பட்டு இருந்த நிலையில் கல்வீச்சு இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் அத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதமரது யாழ் பயணத்தின் போது காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் முழுமையான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் விடுதியின் வெளிப்புறத்தில், யாழ் மருத்துவ மனையின் வீதிப்பக்கமாக இருந்து கல்வீச்சு நடத்தப்பட்டதாகவும், பின்னர் கல்வீச்சை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவை குறித்து துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.