பங்களாதேசில் அதிகரித்து வரும் போதை மருந்து உபயோகத்தை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் இதுவரை 105 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை நாடான மியன்மரில் இருந்து யாபா எனப்படும் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் பங்காளதேசுக்குள் கடத்தப்பட்டு, விற்கப்படுகின்ற நிலையில் அங்கு போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
மேலும் போதை மருந்து விற்பனையாளர்கள் அதிகம் இளைஞர்களையே குறிவைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் அங்கு ஆயிரக்கணக்கான போதை மருந்து வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் வியாபாரத்தினை ஒடுக்குவதற்காக சிறப்பு அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 14 நாட்களில் போதை மருந்து வியாபாரிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நேற்று ஒரு நாள் இரவில் நடத்தப்பட்ட சோதனையில் மட்டும் சுமார் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கக்பட்டுள்ளது
இதன்மூலம், போதை மருந்துகளை தடுப்பதற்கான நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில் இதற்கு பங்களாதேஸ் தேச மனித உரிமைகள் ஆணையகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது