எமது வரலாறுகளை மறந்து, எடுத்தோர் எடுப்பிற்கெல்லாம் அடிமையாகும் தன்மை எம்மில் சிலரிடம் எப்போது வந்தது? தம்மை அடிமையாக்குகி;ன்றார்கள் என்பதை சிந்தையில் நிறுத்தத் தவறி அவர்கள் எதிர்பார்க்கும் அடக்குமுறையாளர்களாக இவர்கள் எளிதில் மாறுவது ஏன்? மனிதத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒருசிலர் காட்டும் அதே அடக்குமுறைச் சிந்தனைகள்தான் எண்ணிக்கையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் எம்மீதான ஆக்கிரமிப்புக்களையும், அழி;ப்புக்களையும் செய்ய வழிகோலியது. இன்னமும் வேறு பரிமாணங்களில் அதைச் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக எமது சொந்த நாட்டிலேயே இனரீதியான வன்முறைகளை அனுபவித்த நாம், அவை யாவற்றையும் மறக்கவும், மழுங்கடிக்கவும் வைக்கும் முகமாக, பிற இனங்களையும், குழுக்களையும், எமக்கு வலிகள் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கின்ற அதே அடக்குமுறைச் சிந்தனைகளின் அடிப்படையில் துவேசத்துடன் நடாத்துகிறோம். எமது வரலாறுகளை மறந்து இன்னுமொரு இனத்தையோ அல்லது எவரையுமோ துவேசத்துடன் பார்ப்பது ஏன்?
நாம் எங்கே போகிறோம்?
இதுவரை காலமும் இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பாக நான் பெருமை கொள்ளும் விடயங்களில் ஒன்று எம்மிடம் இருந்த சுய விமர்சனப் பார்வைகளும், பகுப்பாய்வுத் திறன்களுமாகும். எல்லாத் தளங்களிலும், எல்லா நபர்களிலும் இது வெளிக்காட்டப்படவில்லை என்றாலும், இனம், மதம், சாதி, பால்நிலை போன்ற பலவகையான பேதங்கள் தொடர்பாக தமிழ் பேசும் சமூகங்களுக்கிடையில் எவ்வளவிற்கு ஒருபக்கச் சார்பான வாதங்கள் இருந்து வந்தனவோ அவ்வளவிற்கு அவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் பக்குவச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வெளிகளும் காணப்பட்டன. ஒரு சிலர் அதற்குத் தங்களது உயிரையும் விலையாகக் கொடுத்துள்ளார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட வருடங்களாக பல மட்டங்களிலும், தளங்களிலும் வாழ்தலுக்கான உரிமையையே இழந்து நின்றோம் என்ற வலிகளுடனான வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் சமூகங்களாகிய நாங்கள், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் எமது சமூகப் பொறுப்புக்கள் என்று வரும்போது எமது வரலாற்றையே மறந்து இனவாதத்திற்கும், பாரபட்சத்திற்கும் எதுவித சிந்தனையும் இல்லாமல், முன்னிலையில் நிற்பது மிகவும் வேதனைக்குரியது. இதனை எமது சமூகங்களில் உள்ள ஒரு சிலரே செய்கின்றார்கள். என்றாலும் அவர்களது அவ்வாறான இனத்துவ வெளிப்பாடுகளுக்கு எதிராக நாம் குரல் கொடுக்கத் தவறினால் நாங்களும் அவர்களது துவேசச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்பவர்களாகி விடுவோம்.
எமது வலிகளை மறப்பதற்காக மற்றவர்களுக்கு நாம் வலிகள் கொடுக்க முடியாது. அவ்வாறு செய்பவர்கள் தமிழ் சமூகம் என்ற பெயரில் செய்யும் போது நாம் மௌனித்திருக்க முடியாது. எங்களின் பெயரில், ஒரு சிலர் உடன்போகும் துவேசச் சிந்தனைகளை என்னைப்போல பலர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதே உறுதியான யதார்த்தம். இன்னுமொரு இனத்தையோ அல்லது நபரையோ இழிநிலையில் வைத்து எம்மால் எவ்வாறு நடத்த முடியும்? அதற்கு நாம் ஒருபோதும் உடன்போக முடியாது. இலங்கையைப் பொறுத்த மட்டில் யார் எங்கே வாழ்ந்தார்கள் அல்லது வாழலாம் என்ற கேள்விகளே அர்த்தமற்றவை. இலங்கையில் வாழும் ஆதிவாசிகள் தொடர்பான வாழ்தல்களையும், அவர்களது உரிமைகளையும் உள்ளடக்கியதான வரலாற்றுப் பதிவுகள் இல்லாமலிருக்கின்றவிடத்து வரலாறு என்று எதை நாம் பார்க்கின்றோம் என்பதே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். குறிப்பாக வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையினரது பார்வைகள் திணிப்பதாக இருக்குமிடத்து, பகுத்தாயும் கேள்விகளை அதிமாக எழுப்ப வேண்டியுள்ளது. இதுதான் வரலாறு எனத் திணிக்கப்படும் இடத்தில் கூருணர்வுடன் கூடிய கேள்விகளை எழுப்ப வேண்டிய தேவையுள்ளது. ஆனால் வேதனை தரும் முகமாக ஒரு சிலரிடம் மீளவும் இனத்துவமே தலையோங்கி நிற்கின்றது. காலனித்துவ ஆட்சிக் காலத்திலிருந்து குழுக்களை அழிப்பதற்கும், அடக்குவதற்கும் பயன்பட்டுவரும் ஆயுதமே அக்குழுக்களுக்குள் பிளவுகளைத் தூண்டிவிடும் தந்திரம். இதற்குப் பல உலக வரலாறுகளை உதாரணமாகக் கூறலாம். எமது வரலாறு உள்ளடங்கலாக!
அவ்வாறான பிளவுகள் செய்யக் கூடிய அழிவுகளையும், ஆக்கிரமிப்புக்களையும் நாம் வாழ்ந்து துன்பப்பட்டுள்ளோம். இது பல வலிகளையும், இழப்புகளையும் கொடுத்த அதே நேரம் எமது வாழ்தல் தொடர்பான கூருணர்வையும் மேலும் அதிகரித்துள்ளது. இனரீதியாக எமக்கு இழைக்கப்பட்ட ஒவ்வொரு அநியாயமும் எமது சமூகங்களுக்கு ஒரு வாழ்க்கைப் பாடமாகியது. போருக்குப் பின்னரும் நியாயம் தேடி அலையும் சமூகங்களாகவே நாம் இருக்கின்றோம். அந்த வகையில் எமது வலிகள் எம்மில் மென்மேலும் பக்குவத் தன்மையை அதிகரித்துள்ளது. எம்மைப்போல் உரிமை மறுப்புக்களை எதிர்கொள்ளும் குழுக்களுடன் நாம் ஒன்று சேர்ந்து எமது ஒருங்கிணைவால் உருவாகும் சக்தியுடன் கூடிய சமூக மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது. அதுவே எமது தற்போதைய தேவை. அவ்வாறாக பக்குவப்பட்ட சமூகங்களாக வாழ்ந்து காட்டுவதை விடுத்து, நாம் திரும்பவும் எதுவுமே நடக்கவில்லை போல், எந்த ரீதியான அடக்குமுறையான சிந்தனைகளை அதிகாரத்துடன் சிங்கள இனவாதிகள் எம்மேல் தூண்டி விட்டார்களோ, அதேபாணியில் ஒரு சிலர் இப்போது முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்த வாழ்க்கை முறைகளை அடக்குமுறை செய்ய முயற்சிக்கிறார்கள்.
இலங்கையின் வடக்கில் இருக்கும் சாவகச்சேரி நகரில் மாட்டு இறைச்சி விற்க முடியாது எனக் கூறுபவர்கள் அதற்கான விளக்கமாக முன்வைப்பது அதே இன அடிப்படையிலான அடக்குமுறைச் சிந்தனைகளையே. இதைக் கூறித்தான் இலங்கையின் பல பாகங்களில் இருந்த தமிழர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். துரத்தப்பட்டார்கள். யாருக்கு இந்நாட்டின் எப்பகுதியில் இருப்பதற்கு உரிமை என்பதுதான் கேள்வி என்றால், அந்தக் கேள்விக்குரிய விடை தேடப்பட வேண்டிய முறை, ஆதிவாசிகள் உள்ளடங்கலாக, இலங்கையில் வாழும் பல்லின மக்களது கருத்துக்களை உண்மையாகவும், நேர்மையாகவும், கூருணர்வுடனான ஒரு கலந்துரையாடலுக்கு கொண்டு வருதலேயாகும்.
உலக வரலாறுகளில் எமது தற்போதைய நிலையிலிருந்து அமைதி நோக்கிய பாதையில் செல்வதற்கான முன்னுதாரணங்களை எடுப்பதை விடுத்து அழிவிற்கும், அடக்குமுறைக்கும் மற்றும் காலனித்துவச் சிந்தனைகள10டான உரிமை மறுப்புகளுக்கும் எடுபிடியாகும் உதாரணங்களையே இச்சிலர் முதன்மைப்படுத்துகின்றார்கள்.
எந்த வகையிலும் அடக்குமுறைகளைத் தூண்டும் முகமாக நடந்து கொள்பவர்களிடமும், இனவாதத்தைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்பவர்களிடமும் பகுத்தறிந்து பார்க்கும் பக்குவம் இல்லை எனத் தெளிவாகப் புரிகிறது. அதற்கு நாம் எடுபட்டுப் போகாமல் இருப்பது எமது பொறுப்பு!
எந்த ஒரு சமூகமும் எக்காரணத்தின் அடிப்படையிலும் பாரபட்சமாகவோ அல்லது அடிமைகளாகவோ நடாத்தப்படக்கூடாது என்பதுவே சமூக நீதி. ஒரு நாட்;டின் குடியாளர்களாக வசிக்கும் யாவருக்கும் சம உரிமைகள் உண்டு. அந்நாட்டின் அரசு எவரையும், எந்த அடிப்படையிலும் அடக்கவோ, வன்முறைக்குட்படுத்தவோ முடியாது. அத்துடன் தனது குடிகளை அவ்வாறான அடக்குமுறைகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்குண்டு. அரசுக்கு மட்டுமல்ல. குடிகளாகிய எமக்கும் உண்டு.
ஒரு நாடாக, அதில் வாழும் சமூகங்களாக நாம் இழந்;தவை போதாதா? போரினால் இழந்தவை போதாதென்று இனங்களுக்கிடையே தூண்டப்படுகின்ற துவேசத்தால் நாம் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். அதனை உடனேயே நிறுத்த வேண்டும்.
விஞ்ஞானத் தொழில் நுட்ப வளர்ச்சியில் உலகம் எங்கோ செல்கிறது. எம்மில் சிலரோ இன்னமும் முஸ்லிம் பெண் ஆசியர்கள் தங்களது கலாசார உடையை தமிழ் இந்துப் பாடசாலையில் அணிய முடியாது எனக் கூறுவதோடு, அதனைக் கேவலமான அரசியலாக்குவதிலும் வளங்களை விரயம் செய்கிறார்கள். கலாசாரம் என்று நம் மத்தியில் இருக்கும் விடயங்களும் அடக்குமுறைக் கட்டமைப்புக்களின் வெளிப்பாடுகளாகவே அநேகமாகக் காணப்படுகின்றன. அவற்றை நாம் கேள்விக்குட்படுத்தி, பகுத்தறிவாயும் சமூகங்களாக வேண்டும்.
இதில் மேலும் வேதனையைத் தரும் விடயம் கலாசாரம் என்றவுடனேயே பெண்களை மட்டும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக்கும் ஆணாதிக்கச் சிந்தனை அடக்குமுறைகளைப் பற்றி சிந்தித்துக் கூடப் பார்க்கத் தவறும் நிலை. ஆணாதிக்கச் சிந்தனைகள் பெண்களுக்கு மட்டுமல்ல எமது சமூகங்களிலுள்ள ஆண்கள், சிறுவர்கள், முதியோர்கள் உள்ளடங்கலாக யாவருக்குமே ஒரு கேடு என்ற புரிதலேனும் இருப்பதாகத் தெரியவில்லை.
சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் எமது சமூகங்களில் நடந்து கொண்டிருக்கும் துவேச மனப் பாங்கிற்குப் பொறுப்புக் கூற வேண்டும். அது எந்த இனத்தினால் தூண்டப்பட்டதாக இருந்தாலும் சரி. அல்லது இனம் மட்டுமன்றி வேறு எந்தரீதியிலான அடக்குமுறைச் சிந்தனையினால் தூண்டப்பட்டதொன்றானாலும் சரி. எமது குடும்பங்களில் அப்பொறுப்புக் கூறலுடனான பகிர்வுகளை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும். யாவரும் கூர்மையான சமூகப் பொறுப்புடையவர்களாக நடக்க வேண்டிய தருணம் இது. பன்முகத் தன்மையுடன் கூடிய ஆரோக்கியமான சமூக மாற்றங்களுக்காக வேலை செய்யாவிட்டாலும் சரி, அவ்வாறு நடப்பவற்றை அழிப்பதற்கான விடயங்களையாயினும் செய்யாது இருங்கள்.
முப்பது வருடகாலமாக அநேகமாக துவேசரீதியான அர்த்தப்படுத்தல்களையே எமதாக்கிக் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் அச்சிந்தனைகளுக்கு எம்மில் ஒரு சிலர் அடிமைகளாகி விடுவது என்பது புரிந்து கொள்ளக் கூடிய விடயம்.
நாம் எங்கே போகிறோம் என ஒவ்வொருவரும் ஆழமாகவும், நேர்மையாகவும், துவேச சி;ந்தனைகளற்றும் எம்மை நாமே கேட்பதோடு அதற்கு துவேசச் சிந்தனையே முன்னிலை வகிக்கிறது எனக் கண்டு கொள்வோமேயாயின் அதனை எவ்வாறு ஆரோக்கியமான சிந்தனைகளாக மாற்ற முடியும் என்ற தேடலிலும் இறங்க வேண்டும்.
அத்தோடு உலக அரசியல் அரங்கில் எம்;மைப் போன்ற சிறிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தங்களது பகடைக் காய்களாக்கி பல அரசுகள் செயற்பட்டு வருகின்றன. அவற்றை நாம் விளங்கிக் கொள்ளத் தவறினால் இன்னமும் வேதனைகளை அனுபவிக்கும் சமூகங்களாகவே நாம் வாழ்ந்து கொண்டிருப்போம்.
எமது வன்முறைகளை முதன்மைப்படுத்திய வாழ்வுமுறைகளை நாம் விளங்கிக் கொள்கிறோமோ இல்லையோ எம்மை இன்னமும் அடிமைகளாகவே வைத்திருக்க விரும்புவர்கள் மிகவும் சாதுர்யமாக விளங்கி வைத்துள்ளார்கள். இவ்வாறான வன்முறைகளைத் தூண்டிவிடும் துவேசச் சிந்தனைகளிலிருந்து நாம் மீண்டு வந்தால்தான் வாழ்தலின் அர்த்தங்களை ஆரோக்கியமான சமூகங்களாக வாழ்ந்து காட்டவும், இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு உரிமைகளின் அடிப்படையிலான தீர்வுகளை எமதாக்கிக் கொள்ளக் கூடிய திறன்கள் மிக்க சமூகங்களாகவும் வாழ முடியும்.
காயத்திரி.டி
29.05.2018
1 comment
எனக்கு சிரிப்பு வருகிறது. ஏனென்றால் ஒரு வாய் பேசாத பிராணியை காப்பாற்ற நடந்ததாக நான் நினைத்த ஒரு சின்ன நிகழ்வை, முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் என்று முத்திரை குத்திவிட்டது உங்களின் இந்த கட்டுரை.
உங்கள் கட்டுரையும், சில துவேச மேடைப் பேச்சாளர்களின் பேச்சைப் போல நிகழ்வுகளின் நோக்கங்களை திரிவுபடுத்துகிறதோ என்ற என் ஐயப்பாட்டை உங்கள் சிந்தனைக்கேவிடுகிறேன். காரணம் பட்டறிவால் நம்மவர் சுயசிந்தனையாளர்களாகவே உள்ளனர்.
எம்மோடு வாழும் பிராணிகளைக் காத்தலும் எங்களின் கடைமைகளுள் ஒன்றல்லவோ.
நன்றி.