குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலின் பாதுகாப்பின் அவசியத்தை வழியுறுத்தி மன்னார் நகரில் உள்ள பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து இன்று (30) புதன் கிழமை காலை 10 மணியளவில் விழிர்ப்புணர்வு பேரணி மற்றும் சிரமதான நிகழ்வு இடம் பெற்றது. மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையும்,மன்னார் வலயக்கல்வி பணிமனையும் இணைந்து குறித்த விழிர்ப்புணர்வு பேரணியை முன்னெடுத்தனர்.
இதன் போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன், மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்தியன், மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்து கொண்ட பாடசாலை மாணவர்கள் பதாதைகளை ஏந்தியவாறு மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் பிரதான பாலம் வரை ஊர்வலமாக சென்றனர். பின் மன்னார் பிரதான பாலம் பகுதியில் மாணவர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.