குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி முக்கொம்பன் கிராமத்தில் உள்ள கிராமச் சந்தையை இயக்குமாறு சனசமூக நிலையத்திற்கு சபையின் செயலாளர் அனுமதி வழங்கிய போதும் சபையின் தவிசாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். குறித்த சம்பவம் இன்று 30-05-2018 காலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
கடந்த 24-05-2018 அன்று சனசமூக நிலைய புதிய நிர்வாகத் தெரிவின் போது பூநகரி பிரதேச சபையின செயலாளர் மு. இராஜகோபால் முக்கொம்பனில் மூன்று வருடங்களாக இயங்காது உள்ள சந்தையை துப்பரவு செய்து இயக்குமாறும் புதிய சனசமூக நிலையத்தின் நிர்வாகத்திடம் கோரியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று (30) முக்கொம்பன் மக்களின் உதவியுடன் சனசமூக நிலையத்தினர் சந்தை வளாகத்தை துப்பரவு செய்து இயக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போது குறித்த இடத்திற்கு வருகை தந்த பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் இங்கு எவரும் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது என்றும் உடனடியாக வெளியேறுமாறு அனைவரையும் வெளியேற்றிவிட்டு சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் செயலாளர் மு. இராஜகோபாலை தொடர்பு கொண்டு தான் மூன்று வருடங்களாக இயங்காது இருந்த கிராமத்தின் சந்தையை இயக்குமாறு சனசமூக நிர்வாகத்திடம் கோரியிருந்தேன். அதற்கமைவாக இன்று(30) அவர்கள் அதனை மேற்கொண்ட போது தவிசாளர் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஏன் என தனக்கு காரணம் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்