குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொல்லப்பட்டதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட ரஸ்ய ஊடகவியலாளர் உயிருடன் திரும்பியுள்ளார். கிவ்வில் வைத்து ஊடவியலாளர் அர்கடி பாப்சென்கோ படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செய்தியாளர் மாநாட்டில் உயிருடன் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 41 வயதான அர்கடி பாப்சென்கோ ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததுடன் உக்ரேய்ன் மற்றும் சிரிய விவகாரங்களில் ரஸ்யாவின் நிலைப்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில் வீட்டில் வைத்து அர்கடி பாப்சென்கோ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மரணம் குறித்த செய்தி ரஸ்யாவிற்கும் உக்ரேய்னுக்கும் இடையில் மு ரண்பாட்டு நிலையை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில், ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ உயிருடன் திரும்பியுள்ளார்.
ரஸ்ய அரசாங்கம் தம்மை படுகொலை செய்வதற்கு எடுத்து வரும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே தாம் உயிரிழந்துவிட்டதாக உக்ரேய்ன் அரசாங்கம் அறிவித்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை கொல்வதற்கான சதி குறித்து ஒரு மாதத்திற்கு முன்னர் தனக்கு தகவல் கிடைத்தது எனவும் ரஸ்ய பாதுகாப்பு தரப்பினரே கொலைக்கான உத்தரவை பிறப்பித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். பலத்த கரகோசத்திற்கு மத்தியில் செய்தியாளர் மாநாடு இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஊடகவியலாளர் அர்கடி பாப்சென்கோ தனது உயிரை காப்பாற்றியதற்காக உக்ரைன் பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மனைவி, பிள்ளைகள் மற்றும் ஏனைய நபர்களிடம் இந்த போலித் தகவல் வெளியிடப்பட்டமைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்தக் கொலை நாடகத்திற்கு தானே காரணம் எனவும் ஊடகவியலாளரை கொலை செய்ய முயல்பவர்களை கைதுசெய்வதற்காகவே இந்த நாடகத்தை மேற்கொண்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.