155
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக அமையம் நீண்ட கால கோரிக்கையாகும்.அவ்வகையில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு யாழ்.ஊடக அமையம் விடுத்து வந்த கோரிக்கையின் பிரகாரம் ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு யாழ். பல்கலைக்கழகம் முன்வந்திருப்பதற்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
யாழ். பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்கி வந்த ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையம் நிதியுதவி நிறுத்தப்பட்டதும், அந்த மையத்தின் செயற்பாடுகளும் முடிவுற்கு வந்ததை யாழ் ஊடக அமையம் கவலையுடன் கவனித்தே வந்திருந்தது. எவ்வாறாயினும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் இடைநிறுத்தப்பட்ட ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீள ஆரம்பிக்கப்படவேண்டும் என யாழ.பல்கலைக்கழகத்திடம் நாம் தொடர்ச்சியாக வேண்டுதலை விடுத்தே வந்திருந்தோம்.
குறிப்பாக போரின் மிகப்பெரும் பாதிப்பிற்குள்ளான வன்னி பெருநிலப்பரப்பில் ஊடகத்துறை சார்ந்த பெரும் ஆர்வம் கொண்ட, ஆனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லாத இளைஞர் யுவதிகளின் ஊடகத்துறை சார்ந்த கற்கும் ஆற்றலையும் அவர்தம் ஊடகத்தொழில்; ஆற்றும் திறனையும் மேம்படுத்துவதற்கான நல்வாய்ப்பாக ஊடகத்துறை டிப்ளோமா கற்கைநெறி மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையில் யாழ் ஊடக அமையம் உறுதியாக இருந்தது.
எமது வேண்டுகோளை ஏற்று, யாழ். பல்கலைக்கழகமும் முன்னர் இருந்த டிப்ளோமா கற்கைநெறியை காலத்தேவை கருதி மீளாய்வு செய்து, அதனை மீள நடாத்த முயற்சிகள் மேற்கொண்டு வந்ததை நாம் வரவேற்றிருந்தோம்.
அதன் ஒரு கட்டமாக, மீளாய்வு செய்து தயாரிக்கபட்ட பாட விதானத்தை, முன்னர் டிப்ளோமா படித்த மாணவர்கள் மத்தியிலும் யாழ் ஊடக அமையம் உள்ளடங்கலாக ஊடகவியலாளர்களதும் முன்பாகவும் யாழ். பல்கலைக்கழக ஊடகக்கற்கைகள் விபரமாக கடந்த வாரம் பகிரங்க அழைப்பொன்றின் மூலம் கலந்துரையாடலுக்கு முன்வைத்திருந்தது. அதற்கு ஆக்கபூர்வமான யோசனைகளும் திருத்தங்களும் பரிந்துரைகளும் அப்போது பங்குபற்றியோர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தன.
தமது கருத்துக்களை சிபார்சுகளை முன்வைக்க பகிரங்க வெளியில் இடமிருக்கின்ற நிலையில் முகம் தெரியாத பிரச்சாரங்கள் எமது ஊடகத்துறையினருக்கு குறிப்பாக வன்னி பெருநிலப்பரப்பை சார்ந்தோருக்கான சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்குமென நாம் கருதுகின்றோம்.
எனவே, யாழ.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமாவை மீண்டும் ஆரம்பிக்கும் முயற்சியை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளிற்கு அப்பால் , கைவிட்டுவிடாது, வளர்ந்துவரும் தமிழ் ஊடகத்துறைக்கு தனது நிறுவனம்சார் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவேண்டுமென யாழ். ஊடக அமையம் கேட்டுக்கொள்கிறது.
யாழ்.ஊடக அமையம்
Spread the love