குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சிறுவர்களுக்கு கத்தோலிக்க தேவாலயம் நட்டஈடு வழங்க உள்ளது.
சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கும் தேசிய பொறிமுறைமையில் கத்தோலிக்க தேவாலயங்களும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இவ்வாறு நட்டஈடு வழங்க உள்ளது. கத்தோலிக்க தேவாலயங்களில் இடம்பெற்ற சிறுவர் பாலியல் துஸ்பிரயோகச் சம்பவங்கள் குறித்து ஐந்து ஆண்டுகள் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அவுஸ்திரேலியாவின் 7 வீதமான கத்தோலிக்க மதகுருமார் சிறுவர் துஸ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதிக்கபட்டோருக்கு அரசாங்கமும், தேவாலய நிர்வாகமும் இணைந்து நட்டஈடு வழங்க வேண்டுமென கோரி அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமெனவும், காயங்கள் ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவுஸ்திரேலிய கத்தோலிக்க பேராயர் பேரவையின் தலைவர் மார்க் கொல்டிரிட்ஜ் ஆண்டகை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது