டென்மார்க்கில் பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளை அணிவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. டென்மார்க் வழக்கப்படி இருவர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல் எனவும் எனவே முகத்தை திரையிட்டு மறைக்கும் பழக்கத்திற்கு தடை விதிப்பதன் மூலம் ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதி செய்ய முடியும் எனவும் அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் சோரப் பாப் பால்சன் கடந்த பெப்ரவரி மாதம் தெரிவித்திருந்தார்
இந்த தடை குறித்த சட்ட வரைவு இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 75 உறுப்பினர்கள் இந்த தடை சட்டத்திற்கு ஆதரவாகவும் 30 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தமையினால் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனைத் தொடர்ந்து யாரும் முகத்தினை மறைக்கும் விதமாக பர்தா அணிந்து இருந்தாலோ அவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை வழங்கப்படும் எனவும் இந்த புதிய சட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் 1-ம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.