தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் இருவரது உடல்களை வாங்க அவர்ளது உறவினர்கள் மறுத்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் எனவும், துப்பாக்கிசூடு நடத்திய காவற்துறையினரைக் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து அவர்கள் உடல்களை வாங்க மறுத்துள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, துப்பாக்கி சூட்டில் பலியான சண்முகம் என்பவரது உடலை நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக, மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று மறு பிரேத பரிசோதனை செய்தது. மறு பிரேத பரிசோதனை முடிந்ததும், உடல் அவரது உறவினர்களிடம் மாலை ஒப்படைக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ம் திகதி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். அவர்களில் 7 பேரின் உடல்கள் தூத்துக்குடி அரச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அந்த உடல்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.