குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்று , அங்கே மாலை மரியாதை அளித்து மேள தளத்துடன் அழைத்து செல்வார்கள் என எதிர்ப்பார்க்க கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்கு செல்வது போன்றது அங்கே மோள தாளத்துடன், மாலை போட்டு அழைத்து செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்க கூடாது.
நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள் , அந்த இடத்தில் வெறும் காலுடன் நடக்க கூடிய வாறு அதனை துப்பரவு செய்தமை , குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்டதே என தெரிவித்தார்.