170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்டதாக நினையுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிடம் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒரு புனிதமான தினம். அது நடந்து முடிந்ததை பற்றி கதைத்து அதனை கொச்சைப்படுத்த கூடாது. எனவே அது தொடர்பில் சபையில் கதைப்பதை நிறுத்துவோம். எதிர்க்கட்சி தலைவர் அதற்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்ட பணமாக நினையுங்கள். உண்டியலில் போட்ட பணத்தினை திருப்பி தாருங்கள் என கேட்க கூடாது என தெரிவித்தார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது கோரிக்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love