குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – யாழ்ப்பாணம்..
நல்லாட்சி அரசாங்கம் ஒரு கையால் காணிகளை வழங்கிவிட்டு மறுகையால் காணிகளை பறித்துக் கொண்டிருக்கும் நாசகார வேலையை செய்து கொண்டிருக்கின்றது. என வடமாகாணச பை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
வடமாகாணசபையின் 123வது அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது மண்டைதீவில் கடற்படையின்வசம் உள்ள 18 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிக்க கடற்படையினர் முயற்சித்துவரும் நிலையில், குறித்த காணியை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கோரி வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் விசேட கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை சபைக்கு சமர்பித்திருந்தார். இந்த கவனயீர்ப்பு பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்கள்
அது குறித்து மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவிக்கையில்,
1990ம் ஆண்டு தீவகம் கடற்படையினால் கைப்பற்றப்பட்டதால் தீவக மக்கள் இடம்பெ யர்ந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குடியேறினார்கள். இந்நிலையில் மக்களுடைய காணிகளை கடற்படையினர் அபகரித்துக் கொண்டு அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டனர்.
இவ்வாறு மண்டைதீவில் கடற்படையினரால் அபகரிக்கப்பட்ட 18 ஏக்கர் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கு கடற்படையினர் முயற்சித்து வருகின்றனர். இதனை காணி உரிமையாளர்களான மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் நானும் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் மண்டைதீவுக்கு சென்று நிலமைகளை அவதானித்தி ருந்தோம். அங்கே மக்களுடைய துறைமுகம் மற்றும் நல்ல குடிநீர் கிணறுகள் உள்ள தோட்ட காணிகளையும், குடியிருப்பு காணிகளையும் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் அபகரித்திருக்கின்றனர்.
இந்த காணிகள் மக்களிடம் மீள வழங்கப்படவேண்டும். நல்லாட்சி அரசாங்கம் வலிகாமம் வடக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்குவதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களின் காணிகளை அபகரித்துக் கொண்டிருக்கின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்தின் நாசகார வேலையாகும்.
இதனை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என கூறினார். தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,
ஒரு பக்கத்தால் மக்களுடைய காணிகளை விடு விப்பதாக காட்டிக் கொண்டு மறுபக்கத்தால் மக்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகிறது. அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வந்திருந்தபோது இந்த விடயத்தை கேட்டிருந்தேன். அப்போது இந்த விடயம் தொடர்பில் மேலே பேசிவிட்டோம். என பிரதமர் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார்.
மேலே பேசி விட்டோம் என்றால் என்ன பேசினீர்கள்? என்பதை கூறியிருக்கவேண்டும் இந்த விடயத்தை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கவேண்டும். அந்த கூட்டத்தில் முதலமைச்சர் கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் என்றார். தொட ர்ந்து பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மண்டைதீவில் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்கும் காணிகளை மக்களிடம் மீள வழங்குவது தொடர்பாக கடற்படை தளபதிக்கு கடிதங்கள் எழுதப்பட்டிருப்பதாக கூறினார்.